மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து ஏற்பட்ட அனர்த்தத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக 98 வீடுகள் வழங்கப்படவுள்ளன. அவர்களில் 60 பேருக்கு நாளை வேண்டுமானாலும் வீடுகளை வழங்க நகர அபிவிருத்தி
அதிகாரசபை தயாராக இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருப்பதுடன், வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட இழப்பீடுகள் பற்றிய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு நஷ்ட ஈட்டுத்தொகை தீர்மானிக்கப்படும். நஷ்ட ஈட்டுத் தொகை தொடர்பில் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லையென்றும் அமைச்சர் கூறினார்.
ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளின் சந்திப்பு நேற்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நடைபெற்றது.
இச்சந்திப்புத் தொடர்பிலும், மீதொட்டமுல்ல நிலவரம் குறித்தும் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடொன்றும் அமைச்சரால் நடாத்தப்பட்டது. இதில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:
வீடுகளை இழந்தவர்களுக்கு 60 வீடுகள் தேவை எனக் கூறப்பட்டது.பின்னர் இந்த எண்ணிக்கை 98ஆக அதிகரித்துள்ளது. இவர்களுக்குத் தேவையான வீடுகளை கொள்வனவு செய்து வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது. முதற் கட்டமாக 60 வீடுகளை நாளை வேண்டுமாயினும் வழங்க முடியும். இந்த வீடுகளுக்கான மின்சார இணைப்புக்களே வழங்கப்பட வேண்டியுள்ளன. வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் வழங்கப்படுவதுடன் அதற்கு மேலதிகமாக வீட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு தலா இரண்டரை இலட்சம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
மீதொட்டமுல்லையில் பாதிக்கப்பட்டவர்கள் டெரன்ஸ் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாடசாலை விடுமுறை முடியும்வரை மக்கள் அங்கு தங்கவைக்கப்படுவர்.பின்னர் அங்குள்ள நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான களஞ்சியத்தில் மக்கள் தற்காலிகமாகத் தங்கவைக்கப்படுவார்கள். தொடர்ந்தும் மழை பெய்தால் அனர்த்தம் ஏற்படக்கூடிய பகுதிகள் குறித்து கட்டடங்கள் ஆராய்ச்சி நிறுவகம் எச்சரித்திருப்பதுடன், ஆபத்தான பகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்பகுதியிலுள்ள மக்களை வெளியேற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் வீடுகளுக்கு திரும்ப முடியாதவர்களுக்கு ஜூலை மாசம் முதலாம் திகதியளவில் வீடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு வீடமைப்பு அதிகார சபையும், நகர அபிவிருத்தி அதிகாரசபையும் நடவடிக்கை எடுத்துள்ளன என்றார்.
வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட இழப்பீடுகளை மதிப்பீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதிப்பீடுகளை அரசாங்க அதிகாரிகள் ஆரம்பித்துள்ளபோதும், சிலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தயவுசெய்து மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மதிப்பீடுகளை மேற்கொண்டு பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் எந்தளவு நஷ்டஈடு கொடுக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் தீர்மானிக்கும். எனினும், உயிரிழந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாவும், வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு 25 லட்சம் ரூபாவும் வழங்கப்படவிருப்பதாக ஊடகங்களில் செ ய்திகள் வெளியாகியுள்ளன.
இத்தகவல்கள் தவறானவை. தேவையான பணத்தை வழங்க முடியும் என திறைசேரி அறிவித்துள்ளதுடன், மட்டுப்பாடுகள் மற்றும் சுற்றுநிருபங்களுக்கு அப்பால் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் என்றார்.
மீதொட்டமுல்ல அனர்த்தத்துக்கு அரசாங்கம் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு, விசேட கவனம் செலுத்தியிருப்பதுடன், பாதிக்கப்பட்ட சகலருக்கும் பாதுகாப்பான சூழ்நிலையை உறுதிப்படுத்தும். கொலன்னாவ குப்பை மேட்டை மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் விடயத்தை பாதுகாப்பு அமைச்சும், நகர அபிவிருத்தி சபையும் பொறுப்பேற்றுள்ளன.
இந்த அனர்த்தம் தொடர்பில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை கூடி ஆராய்வதற்கு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இணங்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.