ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு தேசிய அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தை நோக்காக கொண்டு மேற்கொண்டுள்ள முயற்சிக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக வியட்நாம்
ஜனாதிபதி ட்ரன் டை க்வாங் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வியட்நாம் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு நேற்று (17) வியட்நாம் ஜனாதிபதியை அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் நல்லாட்சியினூடாக மேற்கொள்ளப்படும் நல்லெண்ண முயற்சிகள் பாராட்டத்தக்கவை என்றும் அந்நாட்டு ஜனாதிபதி தெரிவித்தார்.
இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் நாட்டின் இரு பிரதான கட்சிகள் இணைந்து அரசமைத்துள்ளமை தொடர்பில் பிரதமர் விளக்கமளித்தார்.
மேலும் எதிர்வரும் இரு தசாப்தகாலங்களில் ஆசிய நாடுகள் வர்த்த மற்றும் பொருளாதாரரீதியாக வலுப்படுத்தவேண்டியதன் அவசியம் தொடர்பில் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்து சமுத்திரத்தில் சுதந்திர கப்பல் போக்குவரத்தை உறுதிப்படுத்துவதற்கான ஒழுக்க கோவைகளை உருவாக்குதல் குறித்து தான் எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாழ்த்துக்களை வியட்நாம் ஜனாதிபதிக்கு தெரிவித்த பிரதமர் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளமை தொடர்பில் தெரிவித்தார்.
இவ்விஜயத்தில், மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, தொலைதொடர்பு அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ, தேசிய நல்லிணக்க, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அளுவிஹார, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, அபிவிருத்தி மூலோபாயங்க்ள மற்றும் சர்வதேச வர்த்த அமைச்சின் செயலாளர் சாந்தனி விஜயவர்தன, வியட்நாமுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹசந்தி திஸாநாயக்க, பிரதமரின் மேலதிக செயலாளர் சமன் அதாவுதஹெட்டி, வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் சுதந்த கணேகமாராச்சி, பிரதமரின் விசேட உதவியாளர் சஹய்க்கா செண்ட்ரா பெரேரா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.