நல்லிணக்கத்தைப் பலப்படுத்தி அனைத்து சமய தத்துவங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மக்களின் மனங்களை இணைக்கும் பணியின் உண்மையான தூதுவர்களாக இருப்பவர்கள் ஆன்மீக தலைவர்களாகும்
என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
நேற்று (09) தங்கொடுவை சிங்கக்குளியில் நடைபெற்ற ‘எரபது வசந்தம்’ தேசிய மற்றும் சமய நல்லிணக்கம் தொடர்பான கலாசார நிகழ்வு மற்றும் கலாசூரி மர்சலின் ஜயகொடி திருத்தந்தைக்கு கௌரவமளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
திரிபிடகம், விவிலியம், அல்குர்ஆன் மற்றும் பகவத் கீதையில் நாம் எதிர்பார்க்கும் நல்லிணக்கத்திற்கு வழிகாட்டப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பௌத்த பிக்குகள், இந்து, இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க சமயத் தலைவர்களுக்கு இதனை சமூகத்தில் நடைமுறைப்படுத்தும் பொறுப்பு உள்ளது.
அனைத்து இனங்களுக்கு மத்தியிலான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திலேயே வரலாற்று காலம்தொட்டு எமது நாடு கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
இன்றும் அனைத்து மக்கள் மத்தியிலும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தி பலமான மக்கள் சமூகமாக நாம் முன்னேறிச்செல்ல வேண்டும்.
இந்த நாட்டில் அனைவருடையவும் உள்ளங்களை வெற்றிகொண்டுள்ள சமயத் தலைவரும் கலைஞருமான திருத்தந்தை மர்சலின் ஜயகொடியின் சேவைகளை பாராட்டிய ஜனாதிபதி, அவரது சேவைகளைப் பாராட்டி அவரது குடும்பத்தின் சிரேஷ்ட உறுப்பினரான மினிப்ரிடா ஜயகொடிக்கு நினைவுச் சின்னத்தையும் வழங்கி கௌரவித்தார்.
சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார மகாநாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், முன்னாள் பேராயர் திருத்தந்தை ஒஸ்வல்ட் கோமஸ், உள்ளிட்ட சமயத்தலைவர்கள், அமைச்சர்களான காமினி ஜயவிக்ரம பெரேரா, அநுர பிரியதர்ஷன யாப்பா, வடமேல் மாகாண சபை முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க, பிரதியமைச்சர் அருன்திக பிரனாந்து ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.