இன்று சுகாதார துறையில் பிரச்சினையாகவுள்ள தாதியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தாதியர் பயிற்சி பாடசாலைகளை நாடு முழுவதும் விரிவுபடுத்தி, அவற்றுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும்
வழங்கி அவற்றிற்கு அதிகளவானோரை இணைத்துக்கொள்வதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நேற்று (04) முற்பகல் மஹரகம இளைஞர் சேவைகள் மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அரச சேவை தாதியர் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
மருத்துவர்கள் மற்றும் தாதியர் உள்ளிட்ட சுகாதாரத் துறை ஆளணியினரின் பற்றாக்குறையே இலவச சுகாதார சேவையை பலப்படுத்துவதில் முதன்மைப் பிரச்சினையாகக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், மேம்பட்டுவரும் பௌதீக வள அபிவிருத்தியுடன் மனித வளமும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
இலவச சுகாதார சேவையின் முக்கிய தரப்பினரான தாதியரின் சேவைக்கு அன்று தொடக்கம் சமூகத்தில் பெரும் கௌரவம் மற்றும் வரவேற்பு காணப்படுகிறது. நாளுக்கு நாள் அபிவிருத்தியடைந்துவரும் நவீன தொழில்நுட்பத்துடன் பெற்றுக்கொள்ளப்படும் அறிவு மற்றும் அனுபவத்தினூடாக மானிட சமூகத்திற்கு சிறந்த பணியை ஆற்றுவதற்கு சுகாதாரத் துறையிலுள்ள அனைவரும் செயற்படுகிறார்கள் என நான் நம்புகிறேன் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
சிறந்த சேவைகளை வழங்கிய தாதியர்களை ஜனாதிபதி விருது வழங்கி கௌரவித்தார்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுகாதார அமைச்சின் செயலாளர் அனுர ஜயவிக்ரம ஆகியோரும், அரச சேவை தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்ரிய உள்ளிட்ட சங்கத்தின் அதிகாரிகளும், உறுப்பினர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.