'பேண்தகு இலங்கை' தேசிய நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் காலை 10.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
2015 செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பேண்தகு அபிவிருத்தி தொடர்பான மாநாட்டில் பிரகடனம் செய்யப்பட்ட பேண்தகு அபிவிருத்தி இலக்குகளான வறுமை, விவசாயம், சுகாதாரம், கல்வி, பெண்களுக்கான பாதுகாப்பு, நீர், வலுசக்தி, வேலைவாய்ப்பு, கைத்தொழில், சமூக சமனின்மை, சனத்தொகை, நுகர்வு, காலநிலை வேறுபாடுகள், சமுத்திரம், உயிர்பல்வகைமை, சமாதானம் மற்றும் பொது வேலைத்திட்டங்கள் போன்ற துறைகள் உள்ளடக்கப்படும் வகையில் பேண்தகு இலங்கை தேசிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அமைச்சுக்கள் மற்றும் வெவ்வேறு நிறுவனங்களால் மேற்கூறப்பட்ட இலக்குகளை அடைவதற்கான தமது செயற்பாடுகள் பிரதிபலிக்கப்படும் வகையில் கண்காட்சிக்கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. கண்காட்சி நடைபெறும் ஐந்து நாட்களும் ஐக்கிய நாடுகளின் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளுக்கு ஏற்ப தினமும் வெவ்வேறு தொனிப்பொருளின் கீழ் நடைபெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு ஏற்ப செயற்படுத்தப்படும் இந்த நிகழ்வு இன்று முதல் ஏப்ரல் 04 ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கேற்ப சிறந்த வாழ்க்கை முறை எனும் தொனிப்பொருளில் இன்று முதல் நாள் கண்காட்சிகள் நடைபெறவுள்ளதுடன், ஆரோக்கியமான மனிதர்கள், நச்சுத்தன்மையற்ற உணவு மற்றும் சிக்கனமான குடிமக்கள் எனும் ஐக்கிய நாடுகளின் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை பிரதிபலிக்கும் வகையிலும் அமையவுள்ளன.
பேண்தகு வாழ்வாதாரம் எனும் தொனிப்பொருளில் இரண்டாம் நாள் கண்காட்சிகள் நடைபெறுவதுடன், வறுமையற்ற உலகம், பசுமை தொழில்கள் மற்றும் பேண்தகு கைத்தொழில்கள் போன்ற பேண்தகு அபிவிருத்தி இலக்குகளுக்கு அன்றைய தினம் முன்னுரிமை வழங்கப்படும்.
மூன்றாம் நாள் கண்காட்சிகள் இயற்கையை பேணுவோம் எனும் தொனிப்பொருளுடன் நடைபெறுவதுடன், தூய்மையான நீர், வானிலையை பேணுதல், விலங்குகளுக்கும் நியாயமான வாழ்க்கைச் சூழல் மற்றும் நச்சுத்தன்மையற்ற சமுத்திரம் எனும் அபிவிருத்தி இலக்குகளுக்கேற்ப கண்காட்சிகள் நடைபெறும்.
சிறந்த அடிப்படை எனும் தொனிப்பொருளுடன் அறிவில் சிறந்த சமூகம், பசுமை வலுசக்தி, ஆண் பெண் வேறுபாடு இல்லை ஒன்றிணைந்து முன்னோக்கி செல்வோம் எனும் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளுக்கேற்ப நான்காம் நாள் கண்காட்சிகள் நடைபெறவுள்ளன.
சிறந்த சமூகம் என்பதே இறுதி நாளுக்கான தொனிப்பொருளாகும். பொருளாதார சமநிலையற்ற சமூகம், பேண்தகு நகரங்கள் எனும் பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் அன்றைய தினம் கவனத்தில் கொள்ளப்படும்.
இதற்கு மேலதிகமாக பேண்தகு இலங்கை தேசிய நிகழ்வில் கிராமிய நாடக மேடை எனும் பெயரில் கலை நிகழ்வுகளும் தினமும் மாலை வேளையில் நடைபெறவுள்ளன.
நாட்டின் சகல அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் பங்களிப்பில் ஊடக வலயமொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து பல நேரடி ஒளிபரப்புகளும் நடைபெறவுள்ளன.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் திகதி வரை தினமும் காலை 9.00 மணி தொடக்கம் 10.00 மணி வரை மக்கள் பார்வைக்காக இக்கண்காட்சி மற்றும் ஏனைய நிகழ்வுகளை இலவசமாக கண்டுகளிக்க முடியும்.
மேலும் சிறுவர்களுக்கான சித்திரப் போட்டி உள்ளிட்ட பல போட்டிகள் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. நச்சுத்தன்மையற்ற சமையற்கலை நிகழ்வுகள், மருத்துவ சிகிச்சை நிலையம், பசுமை தொழிற்சந்தை, பசுமை முயற்சியாளர்களின் நிகழ்வுகள், ஆய்வு கடிதங்கள் சமர்ப்பித்தல், புதிய படைப்புக்களின் காட்சிப்படுத்தல், விவாதங்கள், திரைப்படக்காட்சிகள், விவசாயிகளின் ஒன்றுகூடல், நுகர்வோரின் முறைப்பாடுகளுக்கான தீர்வுகள், உடற்பயிற்சி நிகழ்வுகள் மற்றும் புத்தி ஜீவிகளின் உரையாடல்களும் பேண்தகு இலங்கை தேசிய நிகழ்வுக்கு இணையாக நடைபெறவுள்ளன.
அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சிறு வியாபார முயற்சியாளர்கள், மக்கள் சக்தி இயக்கங்கள், விவசாயிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், இளைஞர், யுவதிகள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரினதும் பங்களிப்புடன் பேண்தகு இலங்கை தேசிய நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.