வடக்கில் வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
எதிர்வரும் மே மாதம் 8ம் திகதி இடம்பெறவுள்ள இராணுவ விழாவை யாழ்ப்பாண நகரில் நடத்துவது தொடர்பில் நடத்தப்பட்ட கலந்துரையாடல் நேற்று (30) ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றபோதே ஆளுநர் இப்பணிப்புரையை விடுத்துள்ளார்.
இக்கலந்துரையாடலையடுத்து யாழ் நகரை பார்வையிட்ட ஆளுநர், யாழ் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வடிகாண்கள் மற்றும் நீர்நிலைகள் என்பவற்றின் நிலை முறையாக பராமரிக்கவில்லை என்றும் அவற்றை முறையாக துப்புறவு செய்யுமாறும் இப்பிரதேசத்திற்கு வருகைத்தரும் சுற்றுலா பிரயாணிகள், பிரதேசவாசிகளால் போடப்படும் குப்பைகளை அகற்றுவதற்கான முறையான திட்டமிடலை முன்னெடுக்குமாறும் குறிப்பிட்டார்.
மேற்கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் யாழ் நகரின் வடிகாண்கள் மற்றும் நீர் நிலைகளை தூய்மையாக வைத்திருப்பதனூடாக நகரின் அழகையும் பெறுமதியையும் பாதுகாத்து சுற்றுலாத்துறையினர், பிரதேசவாசிகள் என அனைவரினதும் சுகாதாரத்தை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் யாழ் மாநகரசபையின் ஆணையாளர் மற்றும் பிரதான நகரசபை அதிகாரிகளுக்கு ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.