சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் பெயர் விரைவில் மாற்றப்பட்டு தேசிய சமூக சேவை கல்லூரி என்று பெயரிடுவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக மூக வலுவூட்டல் மற்றும் நலனோன்புகை அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
சமூக அபிவிருத்தி நிறுவகத்தில் சமூக சேவை பட்டப்படிப்பு மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (30) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
எதிர்வரும் மேமாதம் சமூக அபிவிருத்தி நிறுவகத்திற்கான புதிய கட்டிடமொன்றை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது. மேலும் விரிவுரையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதுடன் கலாநிதி பட்டப்படிப்புக்கான புலமைப்பரிசில்களையும் வழங்கவுள்ளோம்.
இன்று உலகில் அதிகம் பேசப்படும் பத்து விடயங்கள் சில விடயங்கள் தொடர்பான அறிவை வழங்கும் கல்விச்சாலையாக இந்நிறுவகம் காணப்படுகிறது.
புவி வெப்பமடைதல், சூழல் பாதுகாப்பு போன்ற விடயங்களை அடுத்து அதிகரித்து வரும் முதியோர்களின் எண்ணிக்கை, உளவியல் பிரச்சினைகள், பெண்களை வலுவூட்டல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பான கற்கை நெறிகளை இந்நிறுவகத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இங்கு கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு எதிர்வரும் காலங்களில் வறுமையான பிள்ளைகளுக்கு புலமை பரிசில்களையும் வழங்க நாம் திட்டமிட்டுள்ளோம்.
சமூக சேவைகள் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்கள் கடந்த 10 வருடங்களாக நிரப்பப்படவில்லை. அதனை நிரப்புவதற்கான அனுமதிக்கு பல தடவைகள் அமைச்சரவை பத்திரம் நான்கு தடவைகள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் நிராகரிக்கப்பட்டது. தற்போது அனுமதி கிடைத்துள்ளமையினால் விரைவில் சமூக சேவை அதிகாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். இன்று உலகில் அதிகமாக பேசப்படும் பத்து விடயங்களுக்குள் ஒன்றாக இன்று நீங்கள் கற்ற விடயம் உள்ளது. சமூகப்பணி, உளவியல் ஆற்றுப்படுத்தல் உயர் டிப்ளோமா, மகளிர் வலுவூட்டல் டிப்ளோமா மற்றும் மூப்பியல் மற்றும் முதியோர் பராமரிப்பு ஆகிய கற்கை நெறிகளை பூர்த்தி செய்துள்ள மாணவர்களாக நீங்கள் அவ்வெற்றிடங்களில் இணைய தகுதியானவர்கள் என்று தெரிவித்தார்.
நேற்றைய பட்டமளிப்பு விழாவில் சமூகபணி பட்டப்படிப்பை பூர்த்தி செய்த 34 பேருக்கு பட்டமளிக்கப்பட்டதுடன் உளவியல் ஆலோசனை உயர் டிப்ளோமா, உளவியல் ஆலோசனை டிப்ளோமா (சிங்களம் மற்றும் தமிழ்), மூப்பியல் மற்றும் முதியோர் பராமரிப்பு மற்றும் பெண்கள் வலுவூட்டல் ஆகிய துறைகளில் டிப்ளோமாவை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதல்கள் வழங்கப்பட்டன.