உலகின் மிகப்பெரிய முதலீட்டு வங்கியான ஐரோப்பா முதலீட்டு வங்கி இலங்கையில் முதலீடு செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
நிதியமைச்சில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான உயர்ஸ்தானிகர் டங் - லாய் மார்க் (Tung-Lai Margue) இதனை தெரிவித்தார்.
ஜி.எஸ்.பி சலுகையை பெற்றுக்கொள்வதற்கான சுற்றுச்சூழல் தற்போது இலங்கையில் உருவாகி வருகிறது. இது தவிர இலங்கையின் பேண்தகு அபிவிருத்தியின் நோக்கத்தை அடைவதற்கு பூரண ஒத்துழைப்பை நான் வழங்க எதிர்பார்த்துள்ளேன். கடந்த 2014ம் ஆண்டு தொடக்கம் 2020ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த ஐரோப்பிய முதலீட்டு வங்கி 210 மில்லியன் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை உதவிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இலங்கையில் புதிய முதலீட்டை மேற்கொள்வதற்கான ஆயத்தங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, ஐரோப்பிய முதலீட்டு வங்கி இந்நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முதலீடு செய்ய இணக்கம் தெரிவித்துள்ளமை இலங்கைக்கு கிடைத்த வெற்றியாகும். ஐரோப்பியாவிற்குள் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட இவ்வங்கி இலங்கை போன்ற நாடொன்றுடன் கைகோர்ப்பதானது நாட்டின் எதிர்காலத்திற்கு நன்மைபயக்கும் விடயமாகும் என்றும் கூறினார்.
முதலீடு செய்தல் தொடர்பில் ஆராயும் நோக்கில் மூன்று நாள் விஜயம் மேற்கொண்ட ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் புதிய உபதலைவர் அண்ட்ரூ மெக்டொவெல் (Andrew McDowell) தலைமையிலான குழுவினர் நேற்று மாலை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை நிதியமைச்சில் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகவியலாளரை சந்தித்த உயர் ஸ்தானிகர் இலங்கையில் சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தல் தொடர்பான திட்டத்திற்கு அதிக பங்களிப்பு வழங்கவுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.