மின்பாவனையாளர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக புதிதாக 11 சட்டங்களை இவ்வருடத்துக்குள் அறிமுகப்படுத்த இலங்கை பொது மின்பாவனை ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று (28) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நுகர்வோர் தொடர்பான வருடாந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஆணைக்குழுவின் தலைவர் சாலிய மெதிவ் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், புதிதாக சட்டங்களை அறிமுகப்படுத்தும் போதும் அது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படும் போது மக்களின் முன்வைக்கும் ஆலோசனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பெற்றோலியம் மற்றும் நீர் சேவை நிறுவனங்களில் நுகர்வோர் உரிமையை பாதுகாப்பதற்காக முறையான திட்டமிடல் அவசியம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய எதிர்காலத்தில் இலங்கை பொது பாவனை நுகர்வோர் ஆணைக்குழு பெற்றோலியம் மற்றும் நீர் சேவை நுகர்வோர் உரிமைகள் தொடர்பில் பிரகடமொன்றை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் பிரதான மின்சேவை வழங்கும் நிறுவனமான இலங்கை மின்சாரசபை மற்றும் இலங்கை தனியார் நிறுவனம், மின்பாவனையாளர் அதிகாரசபை மற்றும் செயற்பாட்டாளர்களின் பங்களிப்பில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மின்விநியோக சேவையின் தரத்தை மேம்படுத்தல் மற்றும் நுகவர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்காக புதிய சட்ட திட்டங்கள், செயன்முறைகள் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில், இலங்கை பொதுப்பாவனை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க, இலங்கை மின்சாரசபை, இலங்கை மின்னுற்பத்தி தனியார் நிறுவனங்கள், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், தேசிய நீர் உற்பத்தி, விநியோகசபை உயர் அதிகாரிகள் மற்றும் நுகவர்வோர் உரிமை பாதுகாப்புத் திட்டத்தின் தலைவர் ரஞ்சித் வித்தானகே ஆகியோர் கலந்துகொண்டனர்.