ஆசிய - பசுபிக் பிராந்தியத்தின் சிறந்த நிதியமைச்சராக 'த பேங்கர்' சஞ்சிகை தம்மை தெரிவு செய்தமையானது நாட்டில் பேணப்படுகின்ற சிறந்த நிதியொழுக்கத்திற்கு சர்வதேச மட்டத்தில் கிடைத்திருக்கும் பாராட்டாகும் என்று
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆசிய - பசுபிக் பிராந்தியத்தின் 2017ம் ஆண்டுக்கான சிறந்த நிதியமைச்சராக 'த பேங்கர்' சஞ்சிகை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை தெரிவு செய்து அதற்கான விருது வழங்கல் நிகழ்வு கடந்த 24ம் திகதி லண்டனில் உள்ள 'த பேங்கர்' சஞ்சிகை தலைமையகத்தில் நடைபெற்றது. விருதினை 'த பேங்கர் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் பிரயன் கெப்லர் வழங்கினார். இது தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே நிதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இது நான் தனிப்பட்ட ரீதியாக பெற்றுக்கொண்ட விருது அல்ல. மாறாக நாடு முழுவதும் பெற்ற வெற்றியாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் வழிக்காட்டுதலுக்கமைய நாட்டின் பொருளாதாரத்தை வலுபடுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் சர்வதேச மட்டத்தில் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது. அவ்வாறான பாராட்டுதல்களில் இதுவும் ஒன்று.
நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல இது நல்ல சந்தர்ப்பம் என்றே நான் கருதுகிறேன். இவ்விருது தொடர்பில் சகலரும் இலங்கை குறித்து சாதகமான சாதகமான எதிர்பார்ப்பைக் கொள்ள முடியும் என்று நிதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.
புதிய பொருளாதார மறுசீரமைப்பு யுகத்தை நோக்கி இலங்கையை இட்டுச்செல்லுதல், அதன் நிமித்தம் இலங்கை மக்களை உள ரீதியாக தயார்படுத்த மேற்கொண்ட முயற்சிகள், என்பவற்றை பாராட்டும் வகையில் பாராட்டும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார மேம்பாட்டை சிறந்த முறையில் முகாமைத்தும் செய்து அதனை உறுதியான நிலைக்கு கொண்டு செல்ல முடிந்துள்ளமையை பாராட்டும் வகையில் சர்வதேச நிதித்துறையில் முத்திரை பதித்துள்ள பிரித்தானியாவின் லண்டன் நகரில் இருந்து வௌிவரும் ' த பேங்கர் சஞ்சிகை' நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை 2017ம் ஆண்டுக்கான சிறந்த நிதியமைச்சராக தெரிவு செய்துள்ளது.
நாட்டின் செண்மதி நிலுவையைக் அடிப்படையாகக் கொண்டு ஏற்படக்கூடிய நிதி நெருக்கடியை தவிர்த்துக்கொள்ள முடிந்துள்ளமை, நாட்டின் நிதி இருப்பை உறுதியான நிலைக்கு கொண்டு வந்து வௌிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்க நிதியமைச்சரினால் முடிந்துள்ளமை என்பன அச்சஞ்சிகையினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்விருது வழங்கல் விழாவில் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் திருமதி அமரி விஜேவர்தன உட்பட பிரதிநிதிகளும் திருமதி மேலா கருணாநாயக்கவும் கலந்துகொண்டனர்.