60 ஆண்டுகால ரஷ்ய – இலங்கை இருதரப்பு உறவுகளுக்கு புதிய அத்தியாயத்தை சேர்த்து, அடுத்த நூற்றாண்டுக்காக
அதனைப் பலமாக முன்னெடுப்பதற்கு இருநாடுகளுக்குமிடையிலான நட்புறவை மேம்படுத்துவது தனது இலக்காகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று (24) ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலுள்ள இலங்கை தூதரகத்தில் ரஷ்யாவில் வசிக்கும் இலங்கையர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்கொண்டவாறு தெரிவித்தார்.
ரஷ்யாவில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் தொழில்வாண்மையாளர்கள், மாணவர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் இந்த சந்திப்பில் பங்குபற்றினார்கள்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, தனது ரஷ்ய விஜயம் தற்போதைய அரசாங்கம் சர்வதேச ரீதியில் பின்பற்றும் கொள்கைகளிலுள்ள தெளிவான தன்மை மற்றும் பலமான தன்மை சர்வதேச ரீதியில் உறுதிப்படுத்தப்படுத்திய சிறப்பான சந்தர்ப்பமாகும்.
தானும் தனது அரசாங்கமும் மேற்குலக நாடுகளுடன் மட்டும் உறவைப் பேணுவதாக சிலர் பல்வேறு விமர்சனங்களை செய்கின்றனர், அவ்வாறான அனைத்து விமர்சனங்களையும் தான் நிராகரிப்பதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் நடுநிலையான வெளியுறவு கொள்கையினால் அனைத்து உலக அரசுகளும் இன்று இலங்கையின் நட்பு நாடுகளாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கைக்கான சர்வதேச ஒத்துழைப்பு பல தசாப்தங்களாக முன்னேறியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இந்த உறவுகள் வடக்கா, தெற்கா, மேற்கா என்ற பிரச்சினை இல்லையெனவும் அனைத்து நாடுகளுடனும் நட்புறவைக் கட்டியெழுப்பி அனைவரிடமிருந்தும் இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்பைப் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் உத்தியோகபூர்வ அழைப்புக்கமைய மேற்கொண்ட விஜயத்தில் ரஷ்ய ஜனாதிபதியிடமிருந்து கிடைத்த உற்சாகமான வரவேற்பு மற்றும் வெற்றிகரமான இருதரப்பு பேச்சுவார்த்தை தொடர்பில் தனது நன்றியை தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை – ரஷ்ய 60 ஆண்டு வரலாற்று நினைவுகளுடன் இலங்கையின் அபிவிருத்திக்கு தேவையான கல்வி, விவசாய, சுற்றுலாத்துறை, கைத்தொழில், சக்திவலு, தேசிய பாதுகாப்பு, சர்வதேச ரீதியான பிராந்திய பாதுகாப்பு ஆகிய விடயங்கள் தொடர்பில் 02 மணித்தியாலத்துக்கு கூடுதலான நேரம் ரஷ்ய ஜனாதிபதியின் தனிப்பட்ட கவனத்தை ஈர்த்து கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார்.
இதுவரை காலமும் ரஷ்யா இலங்கைக்கு வழங்கியுள்ள உதவிகளை நன்றியுடன் நினைவுகூர்ந்து பாராட்டிய ஜனாதிபதி, 43 ஆண்டுகளுக்கு பின்னர் தமது விஜயத்தின் ஊடாக பலமடையும் இருதரப்பு உறவுகளால் கிடைக்கும் பயன்கள் தாய்நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக முறையாக, திட்டமிடலுடன் பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
அமைச்சர்களான மங்கள சமரவீர, எஸ்.பீ.நாவின்ன, மகிந்த சமரசிங்க, சுசில் பிரேம ஜயந்த, ஜோன் அமரதுங்க, தயாசிறி ஜயசேகர, பிரதி அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ, ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் சமன் வீரசிங்க மற்றும் தூதரக அலுவலர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.