பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டி மற்றும் ஏனைய சந்தர்ப்பங்களில் ஒழுக்கமற்ற ரீதியில் நடந்துகொள்ளும் மாணவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில்
தௌிவுபடுத்துமாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் உரிய பாடசாலை அதிபர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் கொழும்பில் பெண்கள் பாடசாலைகளுக்குள் ஆண்கள் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் பலவந்தமாக நுழைந்த சம்பவத்தை கவனத்திற்கொண்டே இவ்வுத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.
பாடசாலை கிரிக்கட் போட்டி மற்றும் ஏனைய சந்தர்ப்பங்களில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொள்ளும் மாணவர்கள் தொடர்பில் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்களிடன் காணப்படும் கருத்துக்களையும் கருத்திற்கொண்டு ஒழுங்கீனமாக நடந்துக்கொள்ளும் மாணவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இது தவிர பாடசாலைகளில் இடம்பெறும் ஒழுக்கத்தை மீறும் செயற்பாடுகளை முடிந்தளவு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் இவ்வாறான செயற்பாடுகள் நடக்காதிருக்க பொலிஸாருடன் இணைந்து செயற்படுமாறும் அதிபர்களுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
சில ஒழுங்கீனமான செயற்பாடுகளுடன் பாடசாலையின் பழைய மாணவர்களும் தொடர்புபட்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அது தொடர்பிலும் கவனம் எடுக்குமாறும் அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ள அமைச்சர் பாடசாலையின் கௌரவத்தை பாதுகாக்கும் கடப்பாடு அந்தந்த பாடசாலைகளின் பழைய மாணவர்களுக்கும் உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.