உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 22ம் திகதி ரஷ்யாவிற்கு செல்லவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அழைப்பை ஏற்று இவ்விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி நாளைமறுநாள் (23) ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இரு நாடுகளுக்கிடையில் ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளமை கொண்டாடும் நிகழ்வு இவ்விஜயத்தின் போது நடைபெறவுள்ளது.
இருநாடுகளுக்கிடையிலான வர்த்தக முதலீட்டை மேம்படுத்தல், முன்னெடுத்தல் உட்பட நீண்டகால உறவுகளின் முன்னேற்றங்கள் தொடர்பிலும் இக்கலந்துரையாடலின் போது முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.
மேலும் மீன்பிடித்துறை, உல்லாசபிரயாணத்துறை, கலாசாரம் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் உட்பட கல்விசார் ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்கான பல்வேறு ஒப்பந்தங்களிலும் இவ்விஜயத்தின் போது ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளது.
இரு நாடுகளுக்கிடையில் வர்த்தக மற்றும் வணிக ஒத்துழைப்புக்களை திறன்மிக்க வகையில் மேம்படுத்தவதற்கான ஆரம்பமாக இலங்கை- ரஷ்யா வர்த்தக சம்மேளனம் மொஸ்கோ நகரில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை ரஷ்ய வர்தக கவுன்சிலின் பிரதிநிதிகள் குழு இலங்கையை பிரதிநித்துவப்படுத்தும் வகையில் கலந்துகொள்ளவுள்ளது.
1974ம் ஆண்டு அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க மொஸ்கோ நகருக்கு மேற்கொண்ட உத்தியோகப்பூர்வ விஜயத்தையடுத்து இலங்கை அரச தலைவர் ஒருவர் மேற்கொள்ளும் விஜயம் இதுவாகும்.