தாய் நாட்டிற்காக பல்வேறு வகையிலும் தமது பெறுமதி மிக்க பங்களிப்பை வழங்கிய 90 பேரை விருது வழங்கி
கௌரவிக்கும் தேசிய விருது வழங்கல் விழா இன்று (20) மாலை 6.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையமையில் கொழும்பு தாமரைத்தடாக அரங்கில் நடைபெறவுள்ளது.
நாட்டின் முன்னேற்றத்திற்காக பங்களிப்பு வழங்குவோரை இவ்வாறு விருது வழங்கி கௌரவிக்கும் தேசிய நிகழ்வு 12 வருடங்களுக்கு பின்னர் நடைபெறுகின்றமை இதில் விசேட அம்சமாகும்.
ஶ்ரீலங்காபிமான்ய விருதானது இங்கு வழங்கப்படும் கௌரவம் மிக்க விருதாக கருதப்படுகிறது. தாமரை மலர் உருவிலான, தங்க பதக்கமானது நாட்டுக்காக செய்யப்படும் உயரிய சேவைக்காக வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
இது தவிர தேசமான்ய விருதுகள் பத்தும் தேசபந்து விருதுகள் ஒன்பதும் வித்தியாஜோதி விருதுகள் பதினொன்றும் இலங்கை ரஞ்சன விருதுகள் இரண்டும் கலாகீர்த்தி விருதுகள் இருபத்தி இரண்டும் ஶ்ரீலங்கா ஷிகாமணி விருதுகள் ஏழும் வித்யாநிதி விருதுகள் பத்தும் கலாசூரி விருதுகள் பதினான்கும் ஶ்ரீலங்கா திலகம் விருதுகள் இரண்டும் வீரப்பிரதாப விருதுகள் இரண்டுமாக மொத்தம் 89 விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இதில் ஶ்ரீலங்கா ரஞ்சன விருதுகள் இலங்கை மட்டுமன்றி பொதுவாக உலக மக்களுக்கு நன்மைபயக்கும் வகையில் சேவை வழங்கிய இலங்கையர் அல்லாத இருவருக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனிநபர்கள் மற்றும் பொது அமைப்புக்களினால் அனுப்பப்பட்ட முன்மொழிவுகளுக்கமைய தெரிவிக்குழுவினால் ஆராய்ந்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கே இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.
விருதுகளுக்காக 426 முன்மொழிவுகள் கிடைத்ததாக தெரிவுக்குழு தெரிவித்தது.
1086ம் ஆண்டு தேசிய விருது சட்டமூலத்திற்கமைய வழங்கப்படும் இவ்விருது வழங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் வர்த்தமானியில் வௌியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.