நுளம்பு ஒழிப்பு சுகாதார சேவை உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கல் நேற்று (18) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெற்றது.
டெங்கு ஒழிப்புக்காக நுளம்பு ஒழிப்பு சுகாதார சேவை உதவியாளர்கள் 1500 பேரை இணைத்துக்கொள்வதாக அரசாங்கம் மேற்கொண்ட கொள்கை ரீதியான தீர்மானத்திற்கேற்ப மேல் மாகாண நுளம்பு ஒழிப்புக்காக 500 பேர் முதற்கட்டமாக இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினால் இந் நிகழ்வு எற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இரண்டு வார பயிற்சியின் பின்னர் இந்த சுகாதார சேவை உதவியாளர்கள் சேவைக்காக விடுவிக்கப்படவுள்ளதுடன், முதல் 06 மாத காலத்திற்குள் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
நுளம்பு ஒழிப்புக்காக நிரந்தர ஆளணியொன்றினை நியமித்த 03வது நாடாக இலங்கை வரலாற்றில் இடம்பெறுகிறது. சிங்கப்பூர் மற்றும் கியூபா எமக்கு முன்னிலை வகிக்கின்றனர்.
அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரும், பொது சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம் சரத் அமுணுகம, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அசித திசேரா, சிறுநீரக நோய்த்தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின் நிகழ்ச்சித்திட்டப் பணிப்பாளர் அசேல இத்தவெல, சுகாதார போசணை, மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சின் பிரத்தியேக செயலாளர் வைத்தியர் சுஜாதா சேனாரத்ன உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.