டெங்கு நுளம்பு ஒழிப்பு திட்டத்திற்காக சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சினால் மேல்
மாகாணத்தில் தெரிவு செயயப்பட்ட 500 பேரில் தெரிவு செய்யப்பட்ட நூறு பேர் நாளை திருமலை, கிண்ணியா பிரதேச டெங்கு ஒழிப்பு பணிகளை ஆரம்பிக்கவுள்ளனர்.
பயிற்சிகள் வழங்கப்பட்ட குறித்த குழுவினர் நேற்று (18) தொடக்கம் டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நுளம்பு ஒழிப்புப் பணிக்காக 1500 பேரை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. இதன் முதற்கட்டமாக 500 உதவியாளர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர். அவர்களுக்கான பயிற்சிகள் அண்மையில் வழங்கப்பட்டன. பயிற்சியை முடித்த உதவியாளர்கள் நேற்று முதல் களப்பணியை ஆரம்பித்தனர். 'டெங்கு நுளம்பு ஒழிப்பு உதவியாளர்கள் 1500 பேரை இணைத்துக்கொள்ள அமைச்சரவை அனுமதி கிடைத்ததையடுத்து ஏற்கனவே 500 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். மிகுதி 1000 பேர் விரைவில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
சுகாதார சேவை இன்று எதிர்நோக்கியுள்ள மிகப் பாரிய சவால்களாக எச்.ஐ.வி தொற்று மற்றும் டெங்கு நோய் என்பன கருதப்படுகின்றன. ஏனைய தொற்று நோய்களை நாம் கட்டுப்படுத்தியுள்ளோம். 2017ம் ஆண்டில் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் 21,000 மேற்பட்டவர்கள் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8,800 பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை தேசிய திட்டமாக கருதி அரச தலைவர் இன்று இணைந்துக்கொண்டுள்ளமையை நான் வரவேற்கிறேன். கடந்த காலத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் காலநிலை காரணமாக டெங்கு அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சர் இதன் போது கருத்து வௌியிட்டார்.