வடக்கு கிழக்கு மாகாணங்களில் கைத்தொழிலை அடிப்படையாக கொண்ட கிராமிய அபிவிருத்தியை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் ஆரம்பமானது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்களின் ஒத்துழைப்புடன் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வின் பின்னர் இவ்வபிவிருத்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த பத்திரத்திற்கு அமைச்சரவை கடந்த வாரம் அனுமதி வழங்கியது. இத்திட்டமானது மார்ச் மாத இறுதியளவில் நடைமுறைப்படுத்தப்படும்.
யுத்தத்தினால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டமானது, சுயதொழில் முயற்சியை அடிப்படையாக கொண்டது. இத்திட்டம்
கிராமங்களில் இதுவரை கொண்டு செல்லப்படாத சமூக பொருளாதார அபிவிருத்தியை கொண்டு செல்லும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டமானது, குடும்ப தலைமைத்துவத்தைக் கொண்ட பெண்கள், கணவனையிழந்த பெண்கள் மற்றும் தொழிலற்ற இளைஞர்கள் சுய தொழில் முயற்சியினூடாக தமது பொருளாதாரத்தை மேம்படுத்த வாய்ப்பாக அமையும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 113 கிராமங்களில் ஆரம்பிக்கப்படும் இத்திட்டத்திற்காக 446 மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளதுடன் தெரிவு செய்யப்பட்ட 1785 பேருக்கு தமது வருமானத்தை அதிகரிப்பதற்கான கடன் மற்றும் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
அரச மற்றும் தனியார் வங்கிகளினூடாக கடன் முறையின் கீழ் ஒரு நபருக்கு ஆகக்கூடியது 250,000 ரூபா வரை பெற்றுக்கொள்ள முடியும். எந்தவொரு வியாபார திட்டத்திற்குமான கடனின் 25 வீதத்தையும் முழுமையான வட்டியையும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் பொறுப்பெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.