தேயிலை, றப்பர், தெங்கு பயிர்ச்செய்கைக்கான விசேட பசளை மானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் விசேட வேண்டுகோளுக்கமைய இம்மானியம் வழங்கப்படவுள்ளது.
அதற்கமைய, சிறுதேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகாரசபைக்கு 900 மில்லியன் ரூபாவும் தெங்கு பயிர்செய்கை சபைக்கு 500 மில்லியன் ரூபாவும் றப்பர் அபிவிருத்தி திணைக்களத்திற்கு 100 மில்லியன் ரூபாவுமாக நிதியொதுக்கப்பட்டுள்ளது.
இந்நிதியானது 2017ம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் பசளை மாணிய பகிர்ந்தளிப்பதன் முன்னேற்றத்தைப் பொறுத்து எதிர்வரும் காலங்களில் நிதியொதுக்கப்படவுள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த நிதியை எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்பதாக அனைத்து பயனாளிகளுக்கும் பகிர்ந்தளிக்குமாறு உரிய நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
ஒன்று தொடக்கம் ஐந்து ஏக்கர் வரை நிலமுள்ள சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் இப்பசளை மானியம் பெற தகுதியுடையவர்களாகின்றனர். தெங்கு பயிர்ச்செய்கையாளர்களுக்கு ஆகக்கூடிய தொகையாக 9000.00 ரூபாவுக்கு கீழ் பெற்றுக்கொள்ள முடியும். மானியங்களுக்கான விண்ணப்பங்களை தெங்கு பயிர்ச்செய்கைக்கான பிரதான காரியாலயம் அல்லது அனைத்து பிரதேச காரியாலயங்களில் அல்லது தெங்கு அபிவிருத்தி அதிகாரிகளிடம் பெற்றுக்கொள்ள முடியும்.
இருபது பர்சஸ் தொடக்கம் 2 ஹெக்டேயர் வரையான றப்பர் தோட்டங்களை வைத்துள்ள உரிமையாளர்களும் இம்மானியத்திற்காக விண்ணப்பிக்க முடியும். இவர்களுக்கு ஐந்தாயிரத்திற்கு குறைவாக மானியம் வழங்கப்படும். நாடு முழுவதிலும் உள்ள றப்பர் அபிவிருத்தி பிரதேச காரியாலயங்கள், றப்பர் அபிவிருத்தி அதிகாரிகளிடம் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும்.