மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க மீன்பிடிக்கூட்டுத்தாபனத்தை சிறப்பாக இயங்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்தல் என்ற தீர்மானம் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று (14) பிற்பகல் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேர்பா மண்டபத்தில் பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவரான றாடாளுமன்ற உறுப்பினர் ஜீ. சிறிநேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
மீன்பிடித்திணைக்களம் தொடர்பான விடயம் ஆராய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம், அரச மீன்பிடிக்கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு காரியாலயம் இயங்குவதில்லை என்றும், இங்கிருந்த ஐஸ் தொழில்சாலை மூடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் அதிகளவில் மீனவர்களைக் கொண்டதும் நாட்டின் தேசிய உற்பத்திக்கு மீனை பெருமளவில் பங்களிப்புச் செய்யும் மாவட்டமாகும். ஆனால் இங்கிருந்த அரசாங்கத்தின் ஐஸ் தொழில்சாலை மூடப்பட்டுள்ளது. இருப்பினும் தனியார் ஐஸ் தொழிற்சாலைகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மீனவர்களுக்கான தேவைகளின் அடிப்படையிலேயே தனியார் தொழில்சாலைகளைத் தொடங்குகின்றனர். இருப்பினும் அரச தொழிற்சாலையை மூடியுள்ளனர் என்று பிரஸ்தாபித்தார்.
அது தொடர்பாக திணைக்கள உத்தியோகத்தர்களிடம் விளக்கம் கோரிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன், அத் தொழிற்சாலையையும் மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தையும் மீண்டும் வினைத்திறனான முகாமைத்துவத்துடன் இயங்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதேச அபிவிருத்திக்குழு தீர்மானிப்பதாகவும் அதற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்தார.