கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பியுன்க்சே உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 15ம் திகதி இலங்கை வரவுள்ளார்.
இலங்கைக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 40 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டே தென் கொரிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வரவுள்ளார்.
எதிர்வரும் 15ம் திகதி வருகைத் தரும் தென் கொரிய வெளிவிவகார அமைச்சர் அன்றைய தினம் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
கடந்த 31 வருடங்களில் தென் கொரிய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதற்தடவையாகும். கடந்த 1986ம் ஆண்டு அப்போதைய தென் கொரிய வெளிவிவகார அமைச்சர் லி வொன் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தென் கொரிய வெளிவிவகார அமைச்சரின் வருகையானது இரு நாடுகளுக்கிடையிலான உறவை புதுப்பிப்பதுடன் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்த ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.