உலக குளுக்கோமா வாரம் நேற்று (12) ஆரம்பமானது. எதிர்வரும் 18ம் திகதி வரை இவ்வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இம்முறை 'கண்ணுக்குத் தெரியாத குளுக்கோமாவை தோற்கடிப்போம்" தொனிப் பொருளில் உலக குளுக்கோமா வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.
கண் பார்வையிழப்பிற்கு மூன்றாவது பிரதான காரணமாக குளுக்கோமா காணப்படுகிறது. பார்வைக்கான நரம்புகளில் ஏற்படும் பாதிப்பால் படிப்படியாக பார்வையிழப்பு ஏற்படுவதே குளுக்கோமா எனப்படுகிறது.
உலக சனத்தொகையில் 4.2 மில்லியன் பேர் குளுக்கோமாவினால் பார்வையிழக்கின்றனர் என சுகாதார அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இலங்கை சனத்தொகையில் 250,000 பேர் வரை குளுக்கோமாவினால் பாதிக்கப்பட்டுளள்னர். இது மொத்த சனத்தொகையில் 6 வீதமாகும் என அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தேசிய பார்வையின்மை தொடர்பான ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
குளுக்கோமா தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜே.எம்.டப்ளியு ஜயசுந்தர பண்டார, குளுக்கோமாவை அடையாளங்காண்பது மிகவும் முக்கியம். குடும்பத்தில் பெற்றோருக்கு குளுக்கோமா ஏற்பட்டிருப்பின் பிள்ளைகளுக்கும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதனால் பிள்ளைகள் கண் பார்வையை பரிசோதனை செய்தவது மிகவும் முக்கியம் என்று தெரிவித்தார்.
உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு பல்வேறு தேசிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று பணிப்பாளர் நாயகம் இதன் போது சுட்டிக்காட்டினார்.
காலம் தாழ்த்தாமல் குளுக்கோமாவை அறிந்துகொள்ளல், சிகிச்சை வழங்குதல் என்பவற்றினூடாக குளுக்கோமாவின் தாக்கத்தை குறைத்துக்கொள்ள முடியும்.
குளுக்கோமா தொடர்பான அறிவு மக்களிடையே கொண்டு செல்லப்பட வேண்டும் மற்றும் அதற்கான சிகிச்சையின் முக்கியத்துவம் அறியப்பட வேண்டும் என்பதற்கான உலக குளுக்கோமா வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.