ஆண்டுதோறும் மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் வரும் வௌ்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படும் உலக சிறுநீரக தின தேசிய நிகழ்வு நாளை (13) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாத்தளையில் நடைபெறவுள்ளது.
'ஆரோக்கியமான சிறுநீரகத்திற்கு சுகாதாரமான வாழ்க்கை முறை' என்ற தொனிப்பொருளில் இம்முறை தேசிய சிறுநீரக தின நிகழ்வு அனுஷ்டிக்கப்படவுள்ளது.
சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்னவின் பங்களிப்பில் மாத்தளை வில்கமுவ நாமினி ஓய மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ள இத்தேசிய நிகழ்வானது ஜனாதிபதி காரியாலயம் மற்றும் சுகாதார அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
நாடு முழுவதும் உள்ள 11 மாவட்டங்களில் அடையாளங்காணப்படாத 24,900 சிறுநீரக நோயாளர்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அந்நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு மத்திய நிலையங்கள் அமைப்பதற்கும் அம்மத்திய நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் சுகாதார அமைச்சு ஏற்கனவே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பொலன்னறுவை மாவட்ட சிறுநீரக நோயாளர்களுக்காக வைத்தியசாலையொன்று நிர்மாணிக்கப்படுகிறது. இத்தினத்தின் முக்கியத்துவத்தை விளக்கி மக்களை தௌிவுபடுத்துவதற்கான மற்றும் இதுவரை முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சர் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.