வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு இன்று (12) முதல் புதிய போக்குவரத்து திட்டமொன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
இன்று தொடக்கம் எதிர்வரும் 18ம் திகதி வரை ராஜகிரிய சந்தியில் பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்தப்படும் இப்புதிய போக்குவரத்து திட்டம் வெற்றியளிக்கும் பட்சத்தில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தனியார் போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகளை பொது போக்குவரத்து சேவைக்கு பழக்கப்படுத்தி போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் இப்புதிய போக்குவரத்து திட்டமானது ராஜகிரிய சந்தியிலிருந்து ஆயுர்வேத சுற்றுவட்டம் வரையிலும் ஆயுர்வேத சுற்றுவட்டம் தொடக்கம் பொரளை கொடா வீதி வரையிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
ஶ்ரீ ஜயவர்தனபுர பிரதான வீதியில் ராஜகிரியினூடாக இடது பக்க பாதையில் பொது போக்குவரத்து சேவை பஸ்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளதுடன் கொழும்பிலிருந்து செல்லும் அனைத்து பஸ்களும் ஶ்ரீ ஜயவர்தனபுர பிரதான வீதியினூடாக ஆயுர்வேத சந்தி வரையில் பயணம் செய்யும். கொழும்பு நோக்கி பயணிக்கும் அனைத்து பஸ்களும் ராஜகிரிய பஸ் நிலையம் , ஶ்ரீ ஜயவர்தன பிரதான வீதியில் ஜனாதிபதி வித்தியாலத்திற்கருகில் அமைக்கப்பட்டுள்ளது. 144 இலக்க பஸ் HSBC அருகில் ஆரம்பமாகும்.
176, 177 ஆகிய வீதி இலக்க பஸ்கள் ஆயுர்வேத சந்தியில் ஶ்ரீ ஜயவர்தனபுல பிரதான வீதி பாலத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ளதுடன கொடா வீதியினூடாக பொரளை நோக்கி பயணிக்கும் ஏனைய பஸ்களுக்கான பஸ் நிறுத்தம் ஆயுர்வேத சந்தியில் 50 மீற்றர் தொலைவில் து கொடா வீதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய திட்டம் 170, 190, 177, 168, 153, 176, 144, 186, 174, 175, 150 மற்றும் 171 வீதி இலக்க பஸ்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் கொழும்பில் இருந்து ராஜகிரிய நோக்கி பயணிக்கும் பஸ்களின் போக்குவரத்து முறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை.
பொது போக்குவரத்து சேவை பஸ்கள், 10 மாணவர்களுக்கும் அதிகமாக பயணிக்கும் பாடசாலை போக்குவரத்து சேவை பஸ்கள் மற்றும் 10 பேருக்கும் அதிகமான ஊழியர்கள் செல்லும் அலுவலக சேவை வாகனங்கள் இவ்வொதுக்கப்பட்ட இடது பக்க பாதையில் பயணிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாநகர மற்றும் மேல்மாகாண அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, மேல் மாகாண பொது போக்குவரத்து அதிகாரசபை, இலங்கை பொலிஸார், கொழும்பு மாநகரசபை மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகம் என்பன இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.