அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளமையினால் அவர்களுக்கான உரிமை, கௌரவம்
மற்றும் மதிப்பு வழங்கப்படுகிறதா என்று தேடிப்பார்க்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இலங்கைப் பெண்களுக்கு அதிக சுதந்திரம் கிடைத்துள்ள போதிலும் இலங்கையில் அதிக எண்ணிக்கையான பெண்கள் வீட்டுப் பணிகளில் மட்டுமே அதிகம் ஈடுபடுகின்றனர். எனவே இலங்கை உழைக்கும் வர்க்கத்தின் பங்களிப்பை மேம்படுத்த நாம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குடும்பத் தலைவியாக, தாயாக, மனவியாக குடும்பத்தினுல் தனது கடமையை நிறைவேற்றும் அதேவேளை, பெண்ணிடம் உள்ள உடல், உள, ஆன்மீக சக்தியினூடாக சமூகத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்க முடியும். அதனால் அதற்கு அவசியமான சுதந்திரம், வரவேற்பு, தைரியம் மற்றும் சந்தர்ப்பங்களை வழங்குவது எமது கடமையாகும். அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ள போதிலும் கூட அவர்களுக்கு சம உரிமை, கௌரவம், மதிப்பு வழங்கப்படுகிறதா என்று நாம் சிந்திக்க வேண்டும்.
நவீன உலகில் பெண்களின் நிலையை நன்கு உணர்ந்து அதற்கான அதற்கேற்றாற்போன்று எமது பெண்களையும் வலுவூட்டுவதற்கு அரசாங்கமும் முழு சமுதாயமும் செயற்பட வேண்டும. 'முக்காலத்தையும் காண்பவள் வலுகொண்டு வெல்பவள்' என்ற தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச மகளிர் தின தொனிப் பொருள் அதற்கான விரிவான விளக்கத்தை வழங்குகிறது என்று நான் நம்புகிறேன்.
முக்காலத்தையும் அறிந்து நிகழ்கால சமூக சவால்களை வெற்றிகொண்டு முன்னோக்கிச் செல்வதற்கு நமது நாட்டின் அனைத்து பெண்களுக்கும் சக்தியும் தைரியமும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.