இந்து சமுத்திர பிராந்திய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தோனேசியாவிற்கு விஜயம்
செய்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோக்கோ விடோடோவுக்கும் (Joko Widodo) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (08) முற்பகல் இடம்பெற்றது.
40 வருடங்களின் பின்னர் இலங்கையின் அரச தலைவர் ஒருவருக்கு இந்தோனேசியாவில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வதற்காக கிடைத்த முதலாவது உத்தியோகபூர்வ அழைப்பினை நினைவுகூரும் வகையில் நேற்று முற்பகல் இந்தோனேசிய ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லமான மர்டேகா மாளிகைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை இந்தோனேசிய ஜனாதிபதி மிகவும் சினேகபூர்வமான முறையில் வரவேற்றார்.
இலங்கையின் ஜனாதிபதியை வரவேற்பதற்கான வைபவம் மர்டேகா மாளிகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததுடன், 21 மரியாதை வேட்டுக்களுடனான இராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளித்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வரவேற்கப்பட்டார்.
இரு அரச தலைவர்களுக்கும் இடையிலான சினேகபூர்வ சந்திப்பின் பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் இவ்இந்த விஜயத்தின் மூலமாக இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மேலும் வலுப்பெறும் என இந்தோனேசிய ஜனாதிபதி தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான புதிய செயற்திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பாக அரச தலைவர்களுக்கிடையில் கலந்துரையாடப்பட்டதுடன் இரு நாடுகளினதும் விவசாய துறையின் அபிவிருத்திக்காக தொழில்நுட்ப அறிவை பரிமாறிக்கொள்வது தொடர்பான செயற்திட்டம் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.
பிராந்திய பாதுகாப்பினை பலப்படுத்தல் தொடர்பாக ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாகவும் அரச தலைவர்கள் கலந்துரையாடினர்.
அதேபோல் இரு நாடுகளுக்கும் இடையில் திறந்த வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்தல் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டதுடன் இருநாட்டு வெளிவிவகார அமைச்சுக்களின் ஊடாக அதற்கான பின்னணியை கண்டறிவதெனவும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் பெற்றுத்தருவதாக இதன்போது இந்தோனேசிய ஜனாதிபதி குறிப்பிட்டார். ஜனநாயக நாடுகளின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக கொண்டுவரப்படும் செயற்திட்டங்கள் தொடர்பாக இணைந்து செயற்படுவது பற்றியும் அரச தலைவர்கள் கலந்துரையாடினர்.
இந்தோனேசியாவின் தனியார் மற்றும் அரச முதலீட்டாளர்களுக்கும் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க முடியும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அதற்குரிய வரிச்சலுகைகள் மற்றும் வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு அரசு தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கையில் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொள்ளுமாறு இந்தோனேசிய ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்த இலங்கை ஜனாதிபதி எதிர்வரும் மே மாதத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் தின வைபவங்களில் கலந்துகொள்வதற்காக அந்நாட்டு அரச பிரதிநிதி ஒருவரை பங்குபற்ற செய்யுமாறும் தெரிவித்தார்.
இதன் பின்னர் இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான இரு புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் அரச தலைவர்களின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.
இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான கடல்சார் மற்றும் மீன்பிடி ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையும், பாரம்பரிய தொழிற்துறை சார்ந்த ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையும் இதன்போது கைச்சாத்திடப்பட்டன. இலங்கை சார்பில் மீன்பிடி மற்றும் நீரியல் வள இராஜாங்க அமைச்சர் துலிப் வெதஆரச்சியும் இந்தோனேசியா சார்பில் அந்நாட்டின் கடல்சார் அலுவல்கள் மற்றும் மீன்படி அமைச்சரும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர்.
ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் இரு அரச தலைவர்களும் இணைந்து ஊடக சந்திப்பு ஒன்றிலும் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ (Joko Widodo) அவர்களால் வழங்கப்பட்ட விசேட விருந்துபசாரத்தில் ஜனாதிபதி அவர்கள் உள்ளிட்ட தூதுக்குழுவினர் கலந்துகொண்டனர்.