நேற்று (07) இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற இந்து சமுத்திர பிராந்திய அரச தலைவர்கள்
மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாநாட்டில் பங்குபற்றிய சில அரச தலைவர்களுக்குமிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.
அந்த நாடுகளுடன் வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை பலப்படுத்துதல் தொடர்பில் இதன் போது விசேட கவனம் செலுத்திய ஜனாதிபதியிடம் அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக முன்னேறிவரும் இலங்கையுடன் கைகோர்ப்பதற்கு தயாராக இருப்பதாக அந்த அரச தலைவர்கள் உறுதியளித்தனர்.
ஜனாதிபதி முதலாவதாக இந்திய உப ஜனாதிபதி மொஹமட் ஹமீட் அன்சாரியை சந்தித்தார்.
ஜனாதிபதியின் தலைமையில் இந்திய – இலங்கை உறவுகள் புத்தெழுச்சியுடன் முன்னேறுவது தொடர்பில் தனது மகிழ்ச்சியை வெளியிட்ட இந்திய உப ஜனாதிபதி நட்பான அயல் நாடு என்ற வகையில் இலங்கையின் அபிவிருத்திக்கு வழங்கக்கூடிய அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக தெரிவித்தார்.
சுதந்திர, இறைமையுள்ள நாடாக கட்டியெழுப்பப்பட்டு அனைத்து இனங்களுக்குமிடையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதி, முன்னெடுக்கும் செயற்பாடுகள் முன்மாதிரியானதென இந்திய உப ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிப்பதற்காக இந்திய அரசாங்கம் வழங்கிய அரிசி நன்கொடை தொடர்பில் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து, தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சூமாவை சந்தித்த ஜனாதிபதி, இலங்கைக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துதல் தொடர்பில் கலந்துரையாடியதுடன் சர்வதேச செயற்பாடுகளில் தென் ஆபிரிக்கா இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்பிற்கும் பாராட்டுக்களை தெரிவித்தார்.
இலங்கையில் பேண்தகு சமாதானத்தை உருவாக்குவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னெடுக்கும் செயற்பாடுகளை தென் ஆபிரிக்க ஜனாதிபதி பாராட்டியதுடன், சர்வதேச செயற்பாடுகள் போன்றே அனைத்து துறைகளிலும் வழங்கக்கூடிய உதவிகளை இலங்கைக்கு வழங்குவதாகவும் தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல்லை சந்தித்த ஜனாதிபதியிடம், இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் மிக நீண்டகால உறவு நிலவுகிறது. தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் தமது சந்திப்புகள் ஊடாக அந்த உறவுகள் மேலும் பலமடைவதாக அவுஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டார்.
இலங்கையின் சக்திவலு துறையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்தார்.
பொருளாதார மற்றும் வர்த்தக ரீதியில் இலங்கையுடன் உறுதியாக பயணிப்பதற்கு அவுஸ்திரேலியா தயாராக இருப்பதாக தெரிவித்த அவுஸ்திரேலிய பிரதமர் தமது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறும் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து, பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹஸீனா அம்மையாருக்கும் இடையிலான சந்திப்பும் அதன் பின்னர் இடம்பெற்றது.
இலங்கைக்கும் பங்களாதேசுக்கும் இடையில் நீண்டகால இதயபூர்வமான பிணைப்பு நிலவுகிறது. அந்த பிணைப்பை மேலும் பலப்படுத்துவது இரு நாடுகளினதும் குறிக்கோளாகுமென இரு தலைவர்களும் தெரிவித்தனர்.
வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியில் இலங்கையுடன் புதிய பல பிணைப்புக்களை ஏற்படுத்துவதற்கு பங்களாதேஷ் தயாராக இருப்பதாக தெரிவித்த பிரதமர், இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவுகளை விரிவாக்கும் செயற்பாடுகளை எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக, வியாபார உறவுகளை பலப்படுத்துதல் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக விஷேட பிரதிநிதிகள் குழுவை பங்களாதேசுக்கு அனுப்புவதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
தான் சுகாதார அமைச்சராக பணியாற்றிய காலத்தில் சுகாதார துறையில் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உறவுகளைப் பலப்படுத்தி செயற்படுத்துவது தொடர்பிலும் ஜனாதிபதி மகிழ்ச்சி வெளியிட்டார்.
தமது நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபடுமாறு பங்களாதேஷ் பிரதமரும் ஜனாதிபதி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்