நாட்டில் பேண்தகு அபிவிருத்தியை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சியில் பெண்களின் தனித்துவமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்துச் செய்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஐநா எதிர்பார்க்கும் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளுக்கு பெண்களின் பங்களிப்பும் உள்வாங்கப்படும். தாய்மையை புனிதத்தன்மையுடன் மதிக்கும் நாடு இலங்கை. தாய்மைக்கு வழங்கப்படும் உயர் கௌரவத்தினால் மட்டும் ஒட்டுமொத்த பெண் சமூகத்திற்குமான பாதுகாப்பு கிடைப்பதாக கருத முடியாது. அபிருத்தி செயற்பாடுகளில் செயற்றிறனான முறையில் பங்கேற்று அவற்றுக்கு நெறிப்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களை பெண்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் அரச திட்டங்களை வகுக்க வேண்டும்.
நாட்டின் சனத்தொகையில் அரைவாசிக்கும் அதிகமான பிரதிநிதித்துவத்தை கொண்டிருக்கும் பெண்கள் உலகின் அபிவிருத்தியடைந்திருக்கும் நாடுகளுக்கு சமனாக மட்டத்தில் சமூக அபிவிருத்திச் சுட்டியினை கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். எழுத்தறிவை போன்றே ஆயுட்கால கணிப்பீட்டிலும் முன்னிலை வகிக்கின்ற இலங்கைப் பெண்கள் நாட்டின் பொருளாதாரச் சுமையின் பெரும்பகுதியையும் சுமக்கின்றனர்.
நம் பெண்களின் இப்பல்லின ஆற்றலை மேலும் பலப்படுத்தவும் முகாமைத்துவம் மற்றும் அரசியல் தீர்மானங்கள் மேற்கொள்ளும் பொறிமுறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் கடந்த இரண்டு வருட காலங்களில் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வந்த செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல வேண்டும். இதன் பொருட்டு மகளிர் இயக்கங்கள், பெண்ணிய செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட சகல தரப்பினரதும் ஈடுபாட்டையும் பங்களிப்பையும் எதிர்பார்க்கின்றேன்.
இலங்கை மகளிரின் பிரதிவிம்பத்தை கௌரவமான முறையில் சமூகத்தில் நிலைநிறுத்தும் நோக்கத்தோடு முக்காலத்தையும் காண்பவள் வலுகொண்டு வெல்பவள் என்ற தொனிப்பொருளில் இவ்வாண்டு மகளிர் தின செயற்பாடுகள் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன். மகளிர் தின இலக்குக்களை அடைவதன் பொருட்டு செயற்படும் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்