அரசாங்கம் தொடர்பாக அரசியல் எதிர்த் தரப்பினர் சிலர் இணையத்தளங்கள் மற்றும் ஊடகங்களின் வாயிலாக உலகெங்கிலும் பரப்பப்படும் போலியான பிரசாரங்களை நம்ப வேண்டாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இந்தோனேசியா சென்றுள்ள ஜனாதிபதி, நேற்று (06) பிற்பகல் இந்தோனேசியாவில் வாழும் இலங்கையர்களுடன் ஒரு சந்திப்பை மேற்கொண்டார். இச்சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தாய் நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாத்து அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தி மீண்டுமொரு யுத்தம் நாட்டில் ஏற்படாத வகையில் அனைத்து மக்கள் மத்தியிலும் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவது தற்போதைய அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டமாகும் எனக் குறிப்பிட்டார்.
இன்று இலங்கை குறித்தும் இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்தும் முழு உலகினதும் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த ஒத்துழைப்புடன் நாட்டின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை துரிதப்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இலங்கை அரச தலைவர் ஒருவருக்கு இந்தோனேசியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு 40 வருடங்களுக்கு பின்னர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, 44 வருடங்களுக்குப் பின்னர் ரஷ்ய அரசாங்கம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் தான் இன்னும் இரண்டு வாரங்களில் ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்தோனேசிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்பை பாராட்டிய ஜனாதிபதி, வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக 5,000 மெட்றிக் தொன் அரிசியை இந்தோனேசியா அன்பளிப்பாக வழங்கியதை நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
இந்தோனேசியாவில் உள்ள இலங்கை தூதுவர் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. ஜனாதிபதி அவர்களின் வருகையை நினைகூருமுகமாக தூதுவர் அலுவலக வளாகத்தில் நாக மரக் கன்று ஒன்றும் நடப்பட்டது.