நாட்டின் பல மாவட்டங்களில் மீண்டும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையை கருத்திற்கொண்டு டெங்கு ஒழிப்பு வாரத்தை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனரத்ன தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவிடம் கோரியுள்ளார்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் இரத்தினபுரிய ஆகிய மாவட்டங்களிலேயே அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, மார்ச் மாதம் 29ம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 4ம் திகதி வரை நாடு தழுவிய ரீதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 2017ம் ஆண்டு கடந்த இரு மாத காலப்பகுதியில் மட்டும 16470 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் 24பேர் இறந்துள்ளனர். ஜனவரி மாதத்தை விடவும் பெப்ரவரி மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் டெங்கு நோய் வேகமாக பரவுவதற்கான காரணம் குறித்து சுகாதார, மீன்பிடித்துறை மற்றும் மாகாணசபைகள் அமைச்சுக்கள் இணைந்து கலந்துரையாடல் ஒன்றை அடுத்த வாரம் மேற்கொள்ளவுள்ளன.
சுகாதார அமைச்சரின் தலைமையில் அமைச்சின் இடம்பெற்ற கலந்துரையாடலில் கழிவுகள் அகற்றுவதில் உள்ள தாமதம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன் நிர்மாணப்பணிகள் இடம்பெறும் இடங்கள், பாடசாலைகள் என்பவற்றை மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
டெங்கு நோய் பரவும் இடங்களை பரிசோதனை செய்வதற்காக சுகாதார அமைச்சினால் நுளம்பு ஒழிப்பு துறை உதவியாளர்கள் 500 பேரை மேல்மாகாணத்தில் இணைத்துக்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் டெங்கு ஒழிப்புக்கான புகைத்தல் கருவியை பிரசேத சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்கு பெற்றுக்கொடுக்கும் பணி ஏற்கனவே ஆரம்பாகியுள்ள நிலையில், முதற்கட்டமாக 30 கருவிகள் மேல் மாகாணச்சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.