நேற்று (03) தொடக்கம் நாடு முழுவதும் சட்டவிரோத ஆயுதங்களை தேடும் நடவடிக்கையை இலங்கை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர் என்று முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய, பொலிஸ் மாஅதிபர் பூஜித்த ஜயசுந்தரவின் நேரடி கண்காணிப்பில் இத்தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
வடக்கு கிழக்கு உள்நாட்டு பிரச்சினைக் காரணமாக நாட்டில் பலவிடங்களில் சட்ட விரோத ஆயுதங்கள் பரவிக்கிடப்பதாக சுட்டிக்காட்டிய அவர், மேற்குறித்த விடயம் தொடர்பில் தகவல் வழங்குவோர் குறித்து ரகசியம் பேணப்படும் என்றும் சரியான தகவல் வழங்குவோருக்கு பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பொதுமக்கள் சட்டவிரோத ஆயுத பாவனைத் தொடர்பில் 011- 2 854 880 or 011 – 2 854 885 ஆகிய தொலைபேசி இலக்கங்களூடாக தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.