தூய்மையான அரசியல் செயற்பாட்டுடன் அமைந்த தூய்மையான அரச நிர்வாகத்தினை ஏற்படுத்துவதே தனது குறிக்கோளாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு மற்றும் அகில இலங்கை செயற்குழு என்பன நேற்று (02) பிற்பகல் இலங்கை மன்றத்தில் ஜனாதிபதி தலைமையில் ஒன்றுகூடிய சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
தூய்மையான அரசியல் செயற்பாடுகளும், தூய்மையான அரசியல் கதாபாத்திரங்களுமே நாட்டின் தற்போதைய தேவைப்பாடாகக் காணப்படுகிறது .ஜனாதிபதி பதவியை வகித்தாலும் வகிக்காவிட்டாலும் தூய்மையான அரசியல் செயற்பாட்டிற்கான தனது குறிக்கோளை ஒருபோதும் மாற்றிக்கொள்ளப்போவதில்லை.
தூய்மையான அரசியல் இயக்கமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தி முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும் எனவும் வலியுறுத்திய ஜனாதிபதி அவர்கள் எந்தவொரு இடத்திலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒப்பந்தங்களின் மூலமாக கட்டுப்படாது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகள் மற்றும் நோக்கங்களை முன்னோக்கி கொண்டு செல்ல உண்மையான அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.
நாட்டின் இறைமை மற்றும் ஒருமைப்பாட்டினை பாதுகாப்பதற்காக தான் தொடர்ச்சியாக முன் நிற்பதுடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு நீதிபதிகளை நாட்டிற்கு கொண்டுவருவதற்கு தான் தயாரில்லை. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு அமைவாக வெளிநாட்டு நீதிபதிகளை நாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்ற ஆலோசனையை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தெரிவித்துடன், தான் ஒருபோதும் வெளிநாட்டு நீதிபதிகளை நாட்டிற்கு வரவழைப்பதற்கு தயாராக இல்லையென அவருக்கு 24 மணித்தியாலங்களுக்குள் பதிலளித்தேன்.
மக்களின் நலன்கருதி சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் நீதியான சமூகமொன்றினை கட்டியெழுப்புவதற்கு அரசினால் தற்போது பாரிய வேலைத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை அவர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக மேலும் பல பணிகள் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் ஊழல், மோசடி மற்றும் முறைக்கேடுகளை இல்லாதொழித்து நாட்டைக் கட்டியெழுப்பும் தூய்மையான அரசியல் பயணத்திற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய இளைஞர் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும், மே தின ஊர்வலத்தினை வெற்றிகரமாக நடாத்துதல் தொடர்பாகவும் நீண்ட கலந்துரையாடல் இதன்போது இடம்பெற்றது.
சட்ட சங்கம், ஆசிரியர் சங்கம், தொழிற்சங்கங்கள், பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்த அனைத்து சங்கங்களினதும் உறுப்பினர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றியதுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீர உள்ளிட்டோரும், பிரதியமைச்சர் தீ.மு. ஜயரத்ன, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, அதாவுத செனெவிரத்ன உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.