அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு தமது இடங்களை வழங்கிய அனைவருக்கும் இன்னும் சில தினங்களில் நட்டஈடு வழங்கி முடிக்கப்படும் என்று துறைமுகம் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணிப்பிற்காக காணிகள் இழந்தோருக்கான நட்டஈடு வழங்கல் தொடர்பான திட்ட முன்னேற்றக் கூட்டம் இன்று (02) அமைச்சில் இடம்பெற்ற போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தமது சொந்த காணிகளை அம்பாந்தோட்டை துறைமுகத்துக்காக தியாகம் செய்தவர்கள் அனைவருக்கும் நியாயத்தை பெற்றுக்கொடுப்பதே நிகழ்கால அரசின் நோக்கம். இடங்களை இழந்தவர்களுக்கான நட்டஈடு மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக அரசாங்கம் இரண்டு பில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளது.
அந்நிதியானது முறையாக செலவழிக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இரு கட்ட பணிகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. முதற்கட்டத்தின் போது 1115 ஹெக்டேயர் நிலம் உள்வாங்கப்பட்டது. பெற்றுக்கொண்ட அவ்விடங்களுக்குப் பதிலாக மாற்றிடங்களை வழங்குவதுடன் காணியின் பெறுமதிக்கேற்ப நட்டஈடும் வழங்கி முடிக்கப்பட்டுள்ளது. அதற்காக 511 மில்லியன் ரூபா நிதி துறைமுக அதிகாரசபையினால் வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டத்தின் போது உள்வாங்கப்பட்ட காணிகளுக்கான நட்டஈடு திரைசேரியினால் வழங்கப்படுகிறது. அதற்காக திரைசேரி அமைச்சுக்கு வழங்கிய 2 பில்லியன் ரூபா நிதி வழங்கியுள்ளது. அமைச்சில் போதிய இல்லாமையினால் அமைச்சரவை அனுமதியினூடாக திரைசேரி இந்நிதியை வழங்கியது. அந்நிதியில் இதுவரை 237 காணிகளுக்கான நட்டஈடு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் 129 காணிகளுக்கான நட்டஈட்டின் 75 வீதம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு இரண்டு பில்லியன் ரூபாவில் 892 532 701 ரூபா செலவிடப்பட்டுள்ளது. மிகுதி நட்டஈடும் விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவ்வபிவிருத்தித் திட்டத்திற்காக காணிகளை வழங்கியவர்களில் பலர் மிகவும் வறியவர்கள். காணிகளை இழந்து அவர்கள் படும் துன்பம் குறித்த கடந்த அரசாங்கம் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. அந்த தவறை சரி செய்யவே நாம் முயற்சி செய்கிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.