ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்குமிடையிலான ஒரு சந்திப்பு நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
தற்போதைய அரசியல் நடவடிக்கைகள் மற்றும் மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளின் வினைத்திறனை மேம்படுத்தல் தொடர்பாக இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. தொகுதி அமைப்பாளர்கள் இது தொடர்பான தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் முன்வைத்தனர்.
தற்போதைய அரசியல் சூழலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொறுப்புக்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு கூட்டாகச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, கட்சியின் பொறிமுறையை புதிய தோற்றத்துடன் முன்கொண்டு சென்று நேர்மையான அரசியலை முன்னெடுப்பதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்றும் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரத்ன, அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா ஆகிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர, மாகாண ஆளுநர்கள், மாகாண முதலமைச்சர்கள் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.