நாட்டில் உள்ள புராதன சுவரோவியங்களை நவீன தொழில்நுட்பத்தினூடாக படம் பிடித்து ஆவணப்படுத்தி பாதுகாப்பதற்கான திட்டமொன்றை தொல்பொருளியல் திணைக்களம் ஆரம்பித்துள்ளது என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் விசேட ஆலோசனைக்கமைய இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த காலங்களில் புராதன சுவரோவியங்கள் சிதைவடைந்து செல்வதனால் அவ்விடங்களை பாதுகாப்பதுடன் அவ்வோவியங்களை புகைப்படங்களெடுத்து ஆவணப்படுத்துவதன் முக்கியத்துவம் காணப்படுவதாகவும் அதனால் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
தொல்பொருளியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திஸாநாயக்கவின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இலங்கையின் பல்வேறு காலகட்டங்களைச் சார்ந்த சிறந்த சுவரோவியங்கள் இத்திட்டத்தின் கீழ் புகைப்படங்களாக ஆவணப்படுத்தப்படவுள்ளன.
சீகிரிய, பொலன்னறுவை குகை, கண்டி தெகல்தொருவ விகாரை மற்றும் களனி ரஜமகா விகாரை ஆகியவற்றில் உள்ள சுவரோவியங்கள் புகைப்படங்களாக ஆவணப்படுத்தப்படவுள்ளன. சீகிரிய சுவரோவியங்களை நவீன தொழில்நுட்பத்தினூடாக புகைப்படமெடுத்தனூடாக கண்ணுக்குத் தெரியாத 1/10 அளவிலான சிறிய உலோக துண்டும் நூல் துண்டொன்றும் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
ஓவியங்களை புகைப்படமெடுத்தல் திட்டத்தின் கீழ் பெறப்படும் புகைப்படங்களுடன் அழியும் நிலையில் உள்ள புகைப்படங்களையும் இணைத்து புத்தகமாக அச்சிடவும் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.