சுயாதீன ஊடக ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவை வெற்றிகரமான ஆணைக்குழுவாக செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும், ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (15) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் நடைபெற்ற போது கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஆணைக்குழுவை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கான கருத்துக்களை பெறுவதற்கு அடுத்த வாரம் ஏனைய சமயத்தலைவர்கள், ஊடக அமைப்புக்கள், ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஆகியோரை சந்திக்கவுள்ளோம்.
சுயாதீன ஊடக ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தேவை என நாம் நினைத்தோம். கடந்த வருடம் நவம்பர் மாதம் 22ம் திகதி அமைச்சரவை கூட்டத்தில் அதற்கான அமைசரவை அனுமதி பத்திரம் முன்வைக்கப்பட்டது. அதன் அவசியத்தை ஏற்றுக்கொண்ட அமைச்சரவை, பொது மக்களின் கருத்துக்கள், அனைத்து தரப்பினதும் கருத்துக்களும் உள்ளடங்கிய செயற்றிட்டத்தை முன்னெடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியது.
மக்கள் கருத்தை பெற்றுக்கொள்வதற்கான காலம் நீடிக்கப்பட்டு கருத்து பெறப்பட்டது.இது தவிர நானும் அமைச்சின் செயலாளரும், அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகமும் கடந்த வாரம் அஸ்கிரிய மல்வத்த மகாநாயக்க தேரரை சந்தித்து இது தொடர்பில் தெளிவுபடுத்தினோம்.
அமைச்சரவை பத்திரம் அமைச்சின் செயலாளரினால் தயாரிக்கப்படுகிறது. ஏனைய சமய தலைவர்களை, ஊடக அமைப்புக்களையும் ஊடக நிறுவன உரிமையாளர்களையும் அடுத்த வாரம் சந்திக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்விடயம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் உச்ச பங்களிப்பை வழங்குகிறார். அவருடைய பங்களிப்பையும் நாம் பெற்றுக்கொள்வோம். எமது தேவையெல்லாம் வெற்றிகரமான சுயாதீன ஊடக ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவை உருவாக்குவதேயாகும். இது தொடர்பில் ஏற்கனவே நாட்டு மக்கள் அதிகம் அறிந்து வைத்துள்ளனர். மக்கள் கருத்துக்களையும் நாம் பெற்றுகொண்டுள்ளோம். இவ்விடயத்தை ஒற்றுமையாக இணைந்து மேற்கொள்வோம் என்று தெரிவித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய, இப்பத்திரம் தயாரிக்கப்பட்டு, அமைச்சர், பிரதியமைச்சர், நாம் அனைவரும் கலந்துரையாடி, செயலாளரின் திருத்தங்களையும் உள்ளடக்கி, அமைச்சர் மற்றும் செயலாளரின் கையெழுத்துடன் அனுப்பியுள்ளோம். இதில் மக்கள் கருத்துக்களை யாருக்கு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.