வறுமை ஒழிப்பை நோக்காகக் கொண்டு ஜனாதிபதி செயலகத்தினால் நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்படும் கிராம சக்தி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பில் தெரிவு செய்யப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வொன்று நேற்று (13) மட்டக்களப்பில் ஆரம்பமானது
மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிராம சக்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை ஒழிப்புக்கென 28 கிராம சேவையாளர் பிரிவுகளும், உற்பத்தி சேவைகளை மேம்படுத்துவதற்கான 14 கிராம சேவையாளர் பிரிவுகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இச் செயலமர்வின் வளவாளர்களாக ஜனாதிபதி செயலக ஆலோசகர் ஏ.நாகானந்த, கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் வி.மகேந்திரராஜா. மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன், பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எம். அன்வர்தீன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதர்சன் ஆகியோர் விளக்கங்களை வழங்கினர்.
வறுமை ஒழிப்பை நோக்காகக் கொண்டு மனித, நிதி, பௌதீக வளங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் அரச தனியார் சமூக ஒத்தழைப்புடன் வறுமையை ஒழித்து நாட்டில் சுபீட்சத்தினை உறுவாக்குதலே கிராம சக்தி நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்தின் கீழ் 2017ஆம் ஆண்டு நிறைவுக்குள் 1000 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இச் செயலமர்வில் கலந்து கொண்டனர்.
LDA_dmu_batti