பத்தரமுல்ல நிருவாக நகரில் அமைந்துள்ள அரச நிறுவனங்களுக்கான விசேட நேர வேலைத்திட்டம் எதிர்வரும் 18ம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் எதிர்வரும் 3 வருடங்களுக்குள் மேலும் 113 அரச நிறுவனங்கள் நிருவாக நகருக்குள் கொண்டு செல்லப்படும் என்றும் மாநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களுக்கான விசேட காரியாலய நேர திட்ட அறிமுகம் குறித்து ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு பத்தரமுல்ல சுஹுருபாய கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
வாகன நெரிசலை கட்டுப்படுத்த கடந்த அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தது. அதனால் அதிக அரச நிதி செலவாகியது. எனினும் நாம் நடைமுறை சாத்தியமான பல செயற்றிட்டங்களை தற்போது கையாண்டு வருகிறோம். குறிப்பாக வீதி போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த தனியார் வாகனங்களை மட்டுப்படுத்துதல் மற்றும் பொது போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல் என்பன பயனளிக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். எனவேதான் பலருடைய எதிர்ப்புக்கு மத்தியில் வீதி மருங்கு முறையை அறிமுகம் செய்தோம். இதனூடாக ஓரளவுக்கு நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பாராளுமன்ற பாதையில் மட்டும் சில பிரச்சினைகள் இன்றும் காணப்படுகின்றன.
அடுத்த திட்டமாக பத்தரமுல்ல பிரதேச அரச நிறுவன வேலை நேரத்தில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளோம். இது பத்தரமுல்ல பிரதேச அரச நிறுவனங்களுக்கு மட்டுமே உரித்தான திட்டமாகும். தற்போது பத்தரமுல்ல பிரதேசத்தில் 41 அரச நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். சேவையை பெறவும் அதிக எண்ணிக்கையான பொது மக்கள் விஜயம் செய்கின்றனர். எதிர்காலத்தில் மேலும் 113 அரச நிறுவனங்கள் அப்பிரதேசத்திற்கு கொண்டு செல்ல எதிர்பார்த்துள்ளமையினால் மேலும் வாகன நெரிசல் அதிகரிக்கும். அதனால் ஆரம்பக்கட்டமாக 9.15 - 3.15 மணி வரை நேரம் அடையாளங்காணப்பட்டுள்ளது. அதேபோல் 7.30 மணி தொடக்கம் 5.30 மணிவரை ஊழியர்கள் தத்தமது தேவைக்கேற்றாற்போல் அலுவலக பணியை முன்னெடுக்கலாம். 9.15 தொடக்கம் 3.15 வரை கட்டாய அலுவலக நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டால் பயனுள்ளதாயிருக்கும்.
ஏற்கனவே இவ்விடயம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். அடுத்த கட்டமாக இணைய வசதியை பயன்படுத்தி வாகன நெரிசலை கட்டுப்படுத்த எதிர்பார்த்துள்ளோம். இதனூடாக சரியான நேரத்தில் பயணியை வீதிக்கு அழைத்து வரல் மற்றும் க்ளவுட் அப் அறிமுகப்படுத்தல் என்பவற்றை திட்டமிட்டுள்ளோம். இத்திட்டம் ஜனாதிபதி காரியாலயத்தினூடாக கண்டியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. மொரட்டுவ பல்கலைக்கழக புதிய கண்டுபிடிப்பாளர்களினூடாக இது தொடர்பான பல புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றையும் பயன்படுத்தி இத்திட்டத்தை இவ்வருட இறுதியில் அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.
இவ்வூடகவியலாளர் சந்திப்பில் அமைச்சின் செயலாளர் பொறியிலாளர் நிஹால் ரூபசிங்க உட்பட பலர் கலந்துகொண்டனர்