இலங்கையில் நீர் வாழ் உயிரின உற்பத்தியை பாரிய அளவில் மேற்கொள்ளவதற்கான முதலீட்டை மேற்கொள்ள சீனா இணக்கம் தெரிவித்துள்ளது என்று மீன்பிடி மற்றும் நீர் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார்.
அறிவு, தொழில்நுட்பம் மற்றும் நிதி முதலீட்டை வழங்க சீன அரச முன்வந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முப்பது வருடங்களுக்கு மேலாக நீர்வாழ் உயிரின வளர்ப்பில் அனுபவமுள்ள முதலீட்டாளர்களே இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்துள்ளதாகவும் அண்மையில் முதலீட்டாளர்களுடனான சந்திப்பு அமைச்சில் இடம்பெற்றதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மீன்பிடித்துறையில் ஈடுபடும் பல்வேறு நாடுகள் தற்போது நீர்வாழ் உயிரின வளர்ப்பில் ஆர்வம் செலுத்தி வருவதாகவும் குறிப்பாக நீர்தாவரங்களுக்கு உலக சந்தையில் நல்ல மவுசு காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் இலங்கையில் அவ்வாறான நீர்தாவர உற்பத்தி தொடர்பில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாகவும் அதற்கு மேலதிகமாக சூரை மீன் வளர்ப்பு தொடர்பிலும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதற்கமைய, இலங்கையில் நீர்வாழ் உயிரின உற்பத்தி, நீர்தாவர உற்பத்தி மற்றும் மீன் உற்பத்தியை விரைவில் ஆரம்பிப்பதற்கான முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடியதாகவும் தமது முதலீடு இலங்கை காட்டும் ஆர்வம் தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக சீன முதலீட்டு நிறுவனம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாகவும் அசைம்சர் தெரிவித்தார்.