குருணாகலில் புதிய தேசிய பாடசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.
'அண்மையிலுள்ள பாடசாலை- சிறந்த பாடசாலை' திட்டத்தின் கீழ் குருணாகல மகுருஓயவத்த பிரதேசத்தில் இப்பாடசாலை நிர்மாணிக்கப்படவுள்ளது.
நகர பாடசாலைகளில் உள்ள அனைத்து வசதிகளையும் கொண்ட வகையில் நிர்மாணிக்கப்படவுள்ள இப்பாடசாலையானது பிள்ளைகளை சிறந்த பாடசாலையில் சேர்ப்பதற்காக எதிர்நோக்கும் பல்வேறு சிரமங்களுக்கு தீர்வு வழங்கும் வகையில் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் எண்ணக்கருவின் உருவாக்கப்படுகிறது.
அதற்கமைய நாட்டின் அனைத்து பாகங்களிலும் அனைத்து வசதிகளுடன் கூடிய பாடசாலைகளை நிர்மாணிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்பாடசாலைகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய முழுமையான வகுப்பறைகள், கலை பிரிவு, மொழிக்கூடம், ஆய்வுக்கூடம், கணனிக்கூடம், Smart Class Room, கேட்போர்கூடம், உள்ளக விளையாட்டரங்கம், நீச்சல் குளம், அதிபர் மற்றும் ஆசிரியர் இல்லங்கள், உணவகம் உட்பட அனைத்து வசதிகளும் உள்ளடக்கப்படுகின்றன.
குருணாகல மகுருஓயவத்தவில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் இத்தேசிய பாடசாலை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளன. சுமார் 1000 மில்லியன் ரூபா வரை இப்பாடசாலையை நிர்மாணிப்பதற்காக செலவிடப்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளதுடன் 2017 - 2020 காலப்பகுதிக்குள் இப்பாடசாலை நிர்மாணிப்புப் பணிகள் பூர்த்தியடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.
தரம் ஒன்று 1- 13 வரை தரங்களுடன் கலவன் பாடசாலையாக இப்பாடசாலை இயங்கும் என்றும் இப்பாடசாலையினூடாக அப்பிரதேசத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பிள்ளைகள் நன்மை பெறுவர் என்றும் எதிர்காலத்தில் தொழிற்சந்தைக்கு ஏற்றாற்போன்ற செயற்றிறன் மிக்க மனித வளத்தை உருவாக்குவதே இதன் நோக்கம் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.