ஹஜ் புகட்டும் தியாக உணர்வு முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல முழு உலகுக்கும் நல்லதொரு முன் மாதிரியாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமருடைய வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. சமத்துவ சகவாழ்வை கட்டியெழுப்புவதற்கு நபி இப்றாஹிமின் பாதை சிறப்பானது.
உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம்கள் ஏழை – பணக்காரன், கற்றவர் – கல்வியறிவற்றவர்என்ற எவ்விதமான பேதமுமின்றி மக்காநகரில் ஒன்று சேர்ந்து, சமயக் கிரியைகளை மேற்கொள்ளும் ஹஜ் நிகழ்வு இஸ்லாம் மார்க்கத்தில் மிகவும் உயரியதாகக் கருதப்படும் முக்கியமானதோர் சமயநிகழ்வாகும்.
இப்றாஹீம் நபியவர்கள் தனதுமகனான இஸ்மாயில் நபியை இறைவனுக்காகத் தியாகஞ் செய்ய முன்வந்தமையை வெளிப்படுத்தும் இந்த நிகழ்வை, உலகம் முழுவதும் பரந்துள்ள இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து உலக அமைதிக்காக சமயக் கிரியைகளை மேற்கொள்ளும் சர்வதேச மாநாடாகவும் கருதமுடியும்.
சுயநலம் மற்றும் பேராசை என்பவற்றிலிருந்து விடுபட்டு தம்மிடமுள்ளவற்றை ஏனையோருடன் பகிர்ந்துகொள்ளுதல், சகவாழ்வுடன் வாழுதல், சமூகத்தில் உயர்வு தாழ்வினை நீக்கி சமத்துவத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற உயரிய நோக்கங்களுக்கு ஹஜ் பெருநாளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
அது முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி முழு உலகவாழ் மக்களுக்கும் மிகச் சிறந்த முன்மாதிரியாகும் என நான் கருதுகிறேன்.
அந்த ஆன்மீகப் பெறுமானங்களை உலகிற்குக் கொண்டு செல்வதற்கான பலம், துணிச்சல் கிடைக்கவேண்டும் எனப் பிரார்த்தித்து, இன்றைதினம் ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் மகிழ்ச்சியான பெருநாளாக அமையட்டும் என வாழ்த்துகிறேன் பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.