நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 195 கோடியே 93 இலட்சத்து 56 ஆயிரம் ரூபா நிதி வழங்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 18 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட 8 இலட்சத்து 11 ஆயிரம் குடும்பங்களுக்கு உலருணவு நிவாரணங்களை வழங்குவதற்கு இந்நிதி வழங்கப்பட்டுள்ளது.
வரட்சிநிலவும் பகுதிகளில் உள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களால் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களின் ஊடாக உலருணவு நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. மூன்றுக்குக் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு 2,500 ரூபாவும், மூன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு 5,000 ரூபா வீதமும் உலருணவு நிவாரணம் வழங்கப்படுகிறது. பயனாளிகள் சதோச மற்றும் கூட்டுறவு சங்கங்களின் ஊடாக நிவாரணங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
வரட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணங்களை வழங்குவதற்கு மாதமொன்றுக்கு 3.5 பில்லியன் ரூபா திறைசேரி ஒதுக்கவுள்ளது. மூன்று மாதங்களுக்கு இந்த நிவாரணங்கள் வழங்கப்படவேண்டும் என கணிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் வாரத்தில் ஒருநாள் பொது செயற்பாட்டில் ஈடுபடவேண்டும் என்றார்.
குறிப்பாக வரட்சிநிலவும் பகுதிகளில் காணப்படும் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்குவதற்காக அமைச்சு 325 உழவுயந்திர பவுசர்களும் 23 லொறி பவுசர்களும் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக 69.42 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்படுகின்றன. லொறி சாரதிகள் மற்றும் உதவியாளர்களின் கொடுப்பனவுக்காக இந்த நிதி வழங்கப்படுகிறது. 9,778 தண்ணீர் தாங்கிகள் வழங்கப்பட்டிருப்பதுடன், அமைச்சினால் வழங்கப்பட்ட பவுசர்களுக்கு மேலதிகமாக பிரதேச செயலகங்கள், முப்படையினர் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை போன்றவன்றின் ஊாகவும் நீர் விநியோகிக்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டார்.
வரட்சிக்கான உதவியாக பாகிஸ்தானிடமிருந்து 10,000 மெற்றிக் தொன் அரிசியும், இந்தியாவிடமிருந்து 100 மெற்றிக்தொன் அரிசியும் கிடைத்துள்ளன. இவை இரத்தினபுரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பகிரப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட 4 இலட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளுக்கு, விவசாய காப்புறுதி திட்டத்தின் கீழ் 4.2 பில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. தலா 10 ஆயிரம் ரூபாய்கள் வீதம் இந்த நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம், அண்மையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈட்டுத் தொகையான 10 ஆயிரம் ரூபா முற்பணம் சகலருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இது மாத்திரமன்றி சொத்துக்களுக்கு ஏற்பட்ட நஷ்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் ஊடாக நஷ்டஈடு வழங்கப்படுகிறது. வீடுகள் முற்றாக இழந்தவர்களுக்கு வீடுகள் அமைப்பதற்கு 12 இலட்சம் ரூபா வழங்கப்படும். வீடுகளை அமைப்பதற்கான காணிகளை அவர்களே தேடிக்கொள்ளும் பட்சத்தில் காணிக்காக 4 இலட்சம் ரூபா வழங்கப்படும். களுத்துறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈட்டை வழங்க 900 மில்லியன் ரூபா வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.