கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் கடற்படையினர் வசமுள்ள மக்களின் பூர்வீக காணியான இரணைதீவு காணி விடுவிப்பின் முதற் கட்டமாக 186 ஏக்கர் காணியை விடுவிக்கவும் இதற்கென காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளவும் கடற்படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (31) பூநகரி பிரதான கடற்படை தளத்தில் நடைபெற்றது.
இரணைத்தீவுப் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 186 ஏக்கர் காணியை அடையாளப்படுத்துவதற்கு கடற்படையினர் இணக்கம் தெரிவித்தனர். இதற்கான குழுவொன்றை நியமித்து அதன் மூலம் 186 ஏக்கர் காணியையும் அடையாளப்படுத்துவதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன.
இதேவேளை இப்பகுதி கடற்தொழிலாளர்கள் படகுகளை நிறுத்துவதற்கு 400 மீற்றர் கரையோரப்பகுதியையும் விடுவிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
சுமார் 1,100 பரப்பளவைக்கொண்ட இரணைத்தீவில் 186 ஏக்கரை மாத்திரம் விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.
அடுத்த வாரம் பூநகரிப் பிரதேச செயலாளர் மற்றும் இரணைமாதா நகரைச்சேர்ந்த இரண்டு பிரதிநிதிகள் சென்று காணிகளை அடையாளப்படுத்துவதற்கு அனுமதி வழங்க கடற்படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இக் கலந்துரையாடலில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான தரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன், பூநகரி பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்னேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.