மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு, நாட்டின் 25 வீத தமிழ் பேசும் மக்களுக்காக புதிய தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம் இன்று (08) கைச்சாத்திடப்பட்டது
தேசிய தொலைக்காட்சியான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 3ஆவது அலைவரிசையாக ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த அலைவரிசை ”நல்லிணக்க அலைவரிசை” என்ற பெயரில் தனது சேவையை வழங்கவுள்ளது.
இந்த அலைவரிசைக்காக நல்லிணக்க அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்து 180 மில்லியன் ரூபா நிதியையும், புதிய அலைவரிசை (frequency) ஒன்றையும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு பெற்றுக்கொடுத்துள்ளார்.
இந்த அலைவரிசை ஆரம்பிப்பது தொடர்பில் நல்லிணக்க அமைச்சுக்கும், ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கும் இடையில் இன்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜெயவா்தன;
இந்த நாட்டில் தமிழ் மொழி பேசும் 25 வீத தமிழ், முஸ்லிம் மக்களுக்காக ரூபவாஹினி ஆரம்பிக்கப்பட்டு 35 வருடகாலமாகத் தமிழ் மொழி மூலம் அவர்களது கலை, கலாச்சார மற்றும் நடப்பு விவகாரங்களைச் சரியான முறையில் வழங்கத் தவறிவிட்டது.
இக் கருத்தினை கடந்த வருடம் ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதியிடம் கலந்துரையாடும்போது முன்வைத்தோம். அதன் பின்னர் தமிழ் பேசும் மக்களுக்காக ஒரு அலைவரிசையை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்
அமைச்சர் மனோ கணேசன், நேத்ரா அலைவரிசையை கிரிக்கெட் மற்றும் வேறு நிகழ்ச்சிக்காகப் பயன்படுத்துவதனால் தமிழ் பேசும் மக்களுக்குச் சரியான பயனை அடைய முடியாதுள்ளதாக குறிப்பிட்டார். அதேவேளை ஒரு தமிழ் அலைவரிசையை ஆரம்பிக்குமாறும், அதன் ஒரு உப கலையகம் ஒன்றை கிளிநொச்சியில் அமைப்பதற்கும், அதற்குரிய கட்டிட வசதிகளையும் பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
இதனால் கிளிநொச்சி ,யாழ் மக்கள் கொழும்பு வராது அங்கிருந்தே தமது ஒளிப்பதிவுகளைப் பதிவு செய்யமுடியும் எனவும் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர்களான கயாந்த கருணாதிலக்க, மனோ கணேசன், ரவி கருநாயக்ககருணாநாயக்க , ரஞ்சித் சியாலம்பிட்டிய, பிரதியமைச்சா்களான அஜித் பெரேரா, கருணாரத்ன பரணவிதாரண, ஆகியோருடன் தேசிய நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞானஜோதியும் கலந்துகொண்டனர்.