தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரம் நாளை (08) ஆரம்பமாகிறது.
இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரம் இனி ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரை கொண்டாடப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌஸியின் ஒத்துழைப்புடன் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத் தலைவர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் இவ்வாரம் கொண்டாடப்படுகிறது.
இனங்களுக்கிடையே ஒற்றுமை, சமாதானம், அன்பு மற்றும் சகோதரத்துவத்தைக் கட்டியெழுப்புவதுடன் ஒருவருக்கொருவர் பரிவுடனும் நம்பிக்கையுடன் வாழ்வதை உறுதிப்படுத்துவதே இவ்வாரத்தின் நோக்கமாகும்.
இவ்வாரத்தின் முதலாவது நிகழ்வாக ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ள நல்லிணக்க பிரகடனத்தை வௌியிடுதலாகும். இப்பிரகடனமானது அனைத்து நிறுவனங்களிலும் பாடசாலைகளிலும் வாசிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.