ருஹுணு அபிவிருத்தி வலயம் நாளை (07) ஆரம்பிக்கப்படவுள்ளதாக மூலோபாயங்கள் அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்த அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்தார்.
நிதியமமைச்சில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,தெற்கில் ஆரம்பிக்கப்பட்ட ருஹுணு அபிவிருத்தி வலயத்தினூடாக தொழிற்சாலைகள் நிர்மாணிக்கப்பட்டு அவ்வுற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதனூடாக அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ளும் முறையொன்றை தற்போது உருவாக்கி வருகிறோம். அதற்கு சீன நிறுவனங்கள் இணங்கியுள்ளன.
நான்கு மாவட்டங்களை கேந்திரமாக கொண்டு 15,000 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்படவுள்ள இப்பொருளாதார வலயத்தினை நிர்மாணிப்பதற்கு தனியார் காணிகள் 5 வீதம் மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. ஏனைய அனைத்து நிலப்பரப்பும் பொதுமக்களின் விருப்பத்திற்கமைய நட்டஈடு வழங்கிய பின்னரே பெற்றுக்கொள்ளப்படும்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு 1.3 பில்லியன் அமெரிக்க டொலர் செலவாகியுள்ளது. தற்போது நிலவும் பொருளாதார நிலைக்கமைய பாரிய கடன் தொகையை செலுத்துவது கடினம். இவ்வாறான பாரிய தொகை நிதி செலவிடப்படும் போது எப்படி வருமானத்தைப் பெற முடியும் என்பது தொடர்பில் திட்டமிடல் இருக்க வேண்டும். எனினும் கடந்த அரசாங்கம் எந்தவித திட்டமிடலும இன்றி துறைமுகத்தை நிர்மாணித்துள்ளது. சேர்க்கப்பட்ட பெறுமதிக்கமைய குத்தகை விலையை அதிகரிக்கச் செய்யவேண்டியேற்பட்டது இதனால் தான். பொறுப்புள்ள அரசாங்கம் என்றவகையில், இதனை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க எம்மால் முடியாது. அதனால் மாற்றுவழியை தேடவேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். அதனால் தான் சீன அரசாங்கத்தின் உதவியை நாம் பெறவேண்டியேற்பட்டது.
அவ்வாறு சீன அரசாங்கம் முன்மொழிந்த இரு நிறுவனங்கள் முன்வைத்த யோசனைகளை பொருளாதார குழுவுடன் கலந்தாலோசித்து அமைச்சரவையின் அனுமதியை பெற்ற பின்னர் இவ்வாறு இணைந்து குத்தகை ஒப்பந்தத்திற்கு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்னும் இருவார காலத்திற்குள் அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படும்.
பொருளாதார அமைச்சரவை தெரிவுக்குழுவினால் இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அமைச்சர் சரத் அமுனுகம தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது அமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜுன ரணதுங்க, சாகல ரத்நாயக்க, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் இக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு எடுக்க முன்வரும் சைனா மர்சண்ட் நிறுவனமானது, துறைமுகத்தை செயற்றிறன் மிக்கதாக மாற்றியமைப்பதற்கு மேலும் 600 மில்லியன் வரை முதலீடு செய்யவேண்டியுள்ளது. அதனால் அவர்கள் அதனை விடவும் அதிகம் பயன்படுத்த எதிர்பார்த்துள்ளனர். அரசாங்கம் என்றவகையில் அதில் அதிக லாபத்தை நாட்டுக்கு பெற்றுக்கொள்ளது என்பது குறித்தே நாம் பார்க்கிறோம். அனைத்து கலந்துரையாடலின் பின்னர் இறுதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை துறைமுகமானது எதிர்காலத்தில் அரச மற்றும் தனியார் இணைந்த திட்டமாக செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் முழுத்துறைமுகத்தின் 80 வீதம் சீன நிறுவனத்திற்கும் 20 வீதம் இலங்கை துறைமுக அதிகாரசபைக்கும் உரித்துடையதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.