'பாதுகாப்பாகச் சென்றுவருவோம்' என்ற தொனிப்பொருளில் சமூக மட்ட வீதி விபத்துக்களை குறைப்பதற்கான விழிப்புணர்வுச் செயற்றிட்டம் நேற்று (28) மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு பொலிஸாரின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இவ்விழிப்புணர்வு செயற்றிட்டமானது மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கருணாரத்தின தலைமையில் நடைபெற்றதுடன் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜாகொட ஆராய்ச்சி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
முதல் நிகழ்வாக அறிவூட்டும் பெயர்ப்பலகை நகர பஸ் நிலையத்தின் எதிரே மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜாகொட ஆராய்ச்சி திரை நீக்கம் செய்து வைத்தார்.
மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டினேஸ் கருணாநாயக்க மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் கே.வி. கீர்த்திரட்ண ஆகியோரால் பஸ் வண்டிகள் மற்றும் முச்சகர வண்டிகளின் உள்ளே நற்பண்புள்ள சாரதி கடைப்பிடிக்கவேண்டிய அறிவுறுத்தல்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் வாகனங்களின் உள்ளே ஒட்டப்பட்டன.
புத்தாண்டு காலத்தில் வீதி விபத்துக்களைக் குறைத்தல் பாதுகாப்பான பயணத்தினை மேற்கொள்ள தூண்டுதல் வீதி விபத்துக்கள் பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்தல் உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வுச் செயற்திட்டத்தில் விழிப்புணர்வுப் பதாதைகள் திறந்து வைத்தல், வீதி விபத்துப்பற்றி சாரதிகள் பொது மக்களுக்கு விளக்கமளித்தல், ஸ்ரிக்கர்கள் ஒட்டுதல் துண்டுப்பிரசுரம் விநியோகித்தல் ஆகியனவும் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி விபத்துக்களைக் குறைக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இவ் விழிப்புணர்வு நெயற்பாட்டில், கிழக்கு மாகாண வீதிப் போக்குவரத்து அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் உ.யுவநாதன், மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துச்சாலையின் உதவி முகாமையாளர் எஸ்.கிருஷ்ணராஜா, சாரதிப்பயிற்சி நிலையங்களின் பிரதிநிதிகள், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
LDA_dmu_batti