தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் அனுசரணையுடன் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தினால் நடத்தப்பட்ட 12 நாட்கள் ஆங்கில பயிற்சி நெறியின் நிறைவு நாள் நிகழ்வுகள் நேற்று (28) மட்டக்களப்பில் நடைபெற்றன.
அமைச்சின் தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பாளர் நல்லரெட்ணம் துஜோகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டார்.
அத்துடன், புனித திரேசா வித்தியாலய அதிபர் திருமதி மாலதி பேரின்பநாதன், அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் வி.சந்திரகுமார், வளவாளர்களான பி.அன்ரனி, கே.குலேந்திரன், சி.கொன்ஸ்ரரைன், எஸ்.எம்.ஆர்.கிறைசிஸ்ரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்தப் பயிற்சி நிறைவு நாள் நிகழ்வில், பயிற்சி பெற்றவர்களின் நடன, பாடல், நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன், வளவாளர்களுக்கான கௌரவிப்புகளும் நடைபெற்றன.
தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சானது அரச கரும மொழிகளின் பயன்பாட்டினை மேம்படுத்தும் வகையில் ஆங்கில மற்றும் சிங்கள மொழிப் பயிற்சிகளை நடத்தி வருகிறது.
மட்டக்களப்பில் நடைபெற்ற பயிற்சி நெறியில், பாடசாலைக் கல்வியை முடித்த, தொழிலை எதிர்பார்த்திருக்கும் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள இளைஞர் யுவதிகள் பயிற்சிகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிராந்திய ஆங்கில உதவி நிலையத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட இந்த 12 நாள் ஆங்கில பயிற்சியை மாட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 64 இளைஞர் யுவதிகள் நிறைவு செய்துள்ளனர்.
இதே போன்று கடந்த மாதத்தில் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் சிங்கள மொழி கற்பித்தல் பயிற்சிகளும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.