நாடு முழுவதும் உள்ள பாடசாலை மட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப மாணவர் அமைப்புக்களை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பாடசாலைகளில் தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் கல்வியமைச்சு ஆகியன இணைந்து இந்நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளன.
பாடசாலைகளில் நவீன தகவல் தொழில்நுட்ப உபகரணங்களின் பாவனை முறை குறித்த செயன்முறை பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் வாய்ப்புக்களை எதிர்காலத்தில் ஏற்படுத்திக்கொள்வதுடன் தகவல் தொழில்நுட்பத்தை தனக்கும் சமூகத்துக்கும் நன்மைபயக்கும் பயன்படுத்துவது எவ்வாறு என்பது தொடர்பிலும் மாணவர்கள் தௌிவுபடுத்தப்படவுள்ளனர்.
மாவட்டத்தை உள்ளடக்கும் வகையில் ஒரு செயலமர்வில் கல்வி வலய மட்டத்தில் 15 பாடசாலை மாணவர்கள் பயிற்சிக்காக இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இப்பயிற்சியில் தெரிவுசெய்யப்பட்ட மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்வி நிருவாக அதிகாரிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
அநுராதபுரம், பொலன்னறுவை, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, கண்டி, மொனராகலை,பதுளை, நுவரெலியா மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களில் குறித்த பயிற்சி செயலமர்வு வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரையில் தகவல் தொழில்நுட்ப மாணவர் அமைப்புகள் அமைக்கப்படாத பாடசாலைகளிலும் அமைப்புக்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.