காணப்படாமைக்கான சான்றிதழ் வழங்குதல் தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர்வொன்று பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் பணிப்புரைக்கமைய கிழக்கு வலய உதவிப் பணிப்பாளர் நாயகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நடைபெற்ற இச் செயலமர்வில், கிழக்கு வலய உதவிப் பதிவாளர் நாயகம் கே.திருவருள் விளக்கங்களை வழங்கினார்.
இக் காணாமல் போனோருக்கான சான்றிதழ் வழங்கல் குறித்துக் கருத்துத் தெரிவித்த கிழக்கு வலய உதவிப் பதிவாளர் நாயகம் கே.திருவருள்,
பிரதேச செயலாளர்கள், மேலதிக மாவட்ட பதிவாளர்கள், பதிவாளர் பிரிவுகளில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பங்கு கொண்ட இச் செயலமர்வில் காணப்படாமைக்கான சான்றிதழ்களை வழங்குதல் தொடர்பான விடயங்கள், காணப்படாமைக்கான சான்றிதழ் வழங்குவதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்பட்டன.
ஏற்கனவேயுள்ள அசாதாரண சூழ்நிலை நிலவிய காலப்பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகளாலும் அதற்குப்பிந்திய நடவடிக்கைகளாலும் காணாமல்போனோருக்குச் சான்றிதழ் வழங்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
2010 ஆம் ஆண்டு 19ஆம் இலக்க இறப்புப் பதிவுசெய்தல் (தற்காலிக ஏற்பாடுகள் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. இச் சட்டத்திற்கு அமைவாக காணப்படாமைக்கான சான்றிதழ்களை வழங்குவதில் காணாமல் போனதை உறுதிப்படுத்துவதற்குரிய சாட்சியங்களின்மை, உறவினர்கள் மரணம் என்று பதிவு செய்வதற்கு விரும்பாமை, பொதுவாக இறப்பு நடைபெற்று 25 வருடங்களுக்குள் பதிவினை மேற்கொள்தல் வேண்டும் போன்ற காரணங்களினால் காணாமல் போனோருக்கு சான்றிதழ்கள் வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வருகின்றன.
இந்தச் சட்டத்திற்கு மேலதிகமாக காணாமல் போனோருக்குச் சான்றிதழ்கள் வழங்கும் சட்டத்தில் இது போன்ற சிக்கல்கள் தவிர்க்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 2016ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இறப்புக்களின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, வடக்கு கிழக்குப்பிரதேசங்களில் நிலவிய மோதல்களின் விளைவாக அல்லது அதன் பின்விளைவாக அல்லது அரசியல் அமைதிக்குலைவின் அல்லது குடியியல் குழப்பங்களின் அல்லது வலக்கட்டாயமாக காணாமல் போதல்களில் அறிக்கையிடப்பட்டவர்கள், ஆயுதப்படையினர் , பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இந்தக் காணப்படாமைக்கான சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இச் சான்றிதழ் இரண்டு வருடங்கள் செல்லுபடியானதாக இருக்கும்.
அதற்கு மேலதிகமான காலத்துக்கெனில் கால நீடிப்பினை மேலும் இரண்டு வருடங்களுக்கு மேற்கொள்ளவும் முடியும். அதே நேரம் காணப்படாமைக்கான சான்றிதழ் பெற்றுக்கொள்ளப்பட்ட ஒருவருடைய மரணம் தொர்பான சான்றுகள், ஆதாரங்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் மரணப்பதிவினை பெற்றுக் கொள்வதற்கும் ஏற்பாடுகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
காணாமல் போனோர் தொடர்பிலான பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் உள்ள நிலையில் இந்தக் காணப்படாமைக்கான சான்றிதழ்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
இதே நேரம், கிழக்கு மாகாணதத்தில் காணாமல் போனோர் தொடர்பிலான இறப்புப்பதிவினை 3348பேர் பெற்றுக் கொண்டுள்ளனர் என்றும் கிழக்கு வலய உதவிப் பதிவாளர் நாயகம் கே.திருவருள் தெரிவித்தார்.
LDA_dmu_batti