'தேசிய நல்லிணக்கத்திற்கு பத்திரிகையாளர்களின் கடப்பாடு' என்ற தலைப்பிலான செயலமர்வொன்று நாளை (17) மாத்தறை பீக்வெல்ல கங்க அத்தர ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
மாத்தறை மாவட்டச் செயலகத்துடன் இணைந்து இலங்கை பத்திரிகை பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஒரு நாள் செயலமர்வானது நாளை காலை 8.30 மணிக்கு பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தலைமையில் நடைபெறவுள்ளது.
களனி பல்கலைக்கழகத்தின் வெகுஜன ஊடகத்துறை பிரிவின் முன்னாள் தலைவரும் மற்றும் இலங்கை பத்திரிகை பேரவையின் பணிப்பாளர் குழுவின் அங்கத்தவருமான பேராசிரியர் ரோஹன லஷ்மன் பியதாச, இலங்கை பத்திரிகை பேரவையின் தலைவர் சட்டத்தரணி கொக்கல வெல்லால பந்துல மற்றும் ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் மற்றும் இலங்கை பத்திரிகை பேரவை பணிப்பாளர் குழுவின் அங்கத்தவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான காமினி சுமணசேக்கர ஆகியோர் இச்செயலமர்வில் வளவாளர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.
இச்செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் மாத்தறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், மாவட்டச் செயலாளர் பிரதீப் ரத்நாயக்க உட்பட பல அரச அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இச்செயலமர்வில் மாத்தறை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.